பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

192

என்று பலபடப் புகழக்கேட்டு, இவ்வளவு பேர்கள் புகழ்ந்து பேசுவதால், காங்கிரசில் உள்ளவர்கள், தகுதியுள்ளவர்களாக, தன்னலமற்றவர்களாக, தொண்டாற்றக் கூடியவர்களாகத் தாம் இருப்பார்கள் என்று பொதுமக்கள் ஒருகணம் மயங்கும் நேரமாகப்பார்த்து, அம்மையார், சவுக்கடி கொடுக்கிறார்களே,

ஆளுக்கேற்ற பேச்சுப் பேசுவோர்

அகப்பட்டதைச் சுருட்டுவோர்

உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவோர்,

கட்சி வளர ஏதும் செய்தறியாதார்!

காரியவாதிகள்!

என்றெல்லாம்!!

மெத்தக் கஷ்டப்பட்டுப், பெரும்பொருளும் செலவிட்டுக் காங்கிரசார் பொதுமக்களிடம் செல்வாக்குத் தேடும் நேரமாகப் பார்த்து, இந்தக் காலத்துக் காங்கிரசார் கபடர், கசடர், என்று காங்கிரஸ் அமைச்சராகப் பணிபுரியும் பொறுப்புள்ளவர் பேசிடக் கேட்டால், பொதுமக்கள் மனமும் படபடவெனத்தானே அடித்துக் கொள்ளும். இவர்களைப் போய், காந்திய வழிவந்தவர்கள், ஊருக்கு உழைக்கவரும் உத்தமர்கள், தன்னலமற்ற பெரியோர்கள், தகுதியாவும் பெற்றவர்கள் என்று, நாம் இதுநாள்வரை எண்ணிக்கொண்டிருந்தோமே, இப்போதல்லவா தெரிகிறது இவர்களின் ‘உண்மை வடிவம்’— என்றுதானே எண்ணிக்கொள்வர். அதிலும் இது தேர்தல் நேரம்; எடைபோடும் நாட்கள்; ‘மாத்து’ கண்டுபிடிக்கும் காலம்! அப்படிப்பட்ட காலத்திலே, மிகக் கேவலமான எண்ணம் கொண்டவர்கள் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் இன்று உள்ள காங்கிரசார் என்று இலட்சுமிமேனன் கூறுவது, காதிலே நாராசம் காய்ச்சி ஊற்றுவது போலல்லவா இருக்கும்.

நாட்டிலே நல்ல திட்டங்கள் வேண்டும், மக்கள் சுகப்பட வேண்டும், வாழ்வு துலங்கவேண்டும், வ்ஞ்சகம் வீழ்ந்துபட வேண்டும், வலியோர் எளியோரை வாட்டி வதைத்திடும் கொடுமை ஒழிக்கப்படவேண்டும், அதற்கு ஏற்றமுறையிலே ஆட்சிமுறை அமைய வேண்டும் என்பதற்காக, எதிர்வரிசை