பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

193

நின்று சொந்தத்துக்கு ஒரு சுவையும் பயனும் எதிர்பார்க்காமல், மனதிற்குச் சரியென்று பட்டதை, மரியாதை கலந்த உறுதியுடன் நாம் எடுத்துச் சொல்கிறோமே, தம்பி! என்னென்ன ஏசிப் பேசுகிறார்கள், எவரெவரை விட்டுப் பேசவைக்கிறார்கள், அங்கம் அங்கமாக வர்ணிக்கிறார்கள், பரம்பரைகளை ஆராய்கிறார்கள், பழிச்சொற்களை வீசுகிறார்கள், பற்களை நறநறவெனக் கடிக்கிறார்கள், தாவித்தாவிக் குதிக்கிறார்கள், காங்கிரசார்—தலைவர்கள் வரிசையிலே உள்ளவர்களேகூட; பார்க்கிறோம். இதோ அம்மையார், செம்மையாகக் கொடுக்கிறார்களே, சவுக்கடி. வாய் திறக்கிறார்களா! முடியுமா!! எல்லா ரோஷமானமும் ஆத்திரமும் ஆர்ப்பரிப்பும், நம்மை நோக்கித்தான் பாய்கிறதேதவிர, பத்தாம்பசலி என்கிறார், படுமோசம் என்கிறார், சுயநலமிகள் என்கிறார், சுகபோகிகள் என்கிறார், கொள்கை தெரியாதார் என்கிறார், கூடிக் குடிகெடுக்கிறார்கள் என்கிறார், அம்மையார்; ஒரு வார்த்தை, ஒரு கனைப்பு, ஒரு இருமல், தும்மல்! கிடையாது! சுருண்டு சுருண்டு கீழேவிழும் அளவுக்குக் கொடுத்திருக்கிறார் அம்மையார்; துடைத்துக்கொண்டு. அதை எங்கே நாம் பார்த்துவிடுகிறோமோ என்று கவலைப்பட்டுத், தழும்புகளை மறைத்துக்கொள்கிறார்களே தவிர, எங்களையா இப்படிக் கேவலமாகப் பேசுவது? எப்படிப் பேசலாம்? எப்படிப் பொறுத்துக் கொள்வோம்? ஏன் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்கும் துணிவு இருக்கிறதா! எப்படி இருக்கமுடியும்? அம்மையார் தான், புட்டுப்புட்டுக் காட்டுகிறார்களே! கிளறினால், மேலும் பல வெளிவந்துவிடுமே என்ற கிலி! எனவே தான் வாயடைத்துக் கிடக்கிறார்கள்.

இருந்தபோது சாமரம் வீசியவர்கள், விலகி இழிமொழி கக்கினால், அதைச் சிந்தாமல் சிதறாமல் பிடித்துக்கொண்டு வந்து, சந்தைக் கடையிலே கூவிக் கூவி விற்கிறார்களே காங்கிரசார், நம்மைக் கேவலப்படுத்த; இலட்சுமி மேனன் தரும் வார்த்தைகள், நற்சான்றுப் பாத்திரங்கள் என்று கருதுகின்றனரா!!

நம்மைவிட்டு விலகியோர், நாடிப்பெற்ற கொள்கையை வெறுத்தோர், பழிசுமத்தி, இழிமொழி பேசிப், பகைகக்கித், தங்கள் போக்குக்குச் சமாதானம், விளக்கம் தேடிக்கொள்கிறார்கள். அவர்கள் நம்மைப் பகைத்துக் கொண்டதால் பேசித்தீரவேண்டியது என்ற தரக்குறைவான முறை காரணமாக, கடுமொழி பேசினால், பார் பார்! போடுபோடென்று