21
‘திராவிடநாடு!’ கேட்கும் குரல் வலிவடைந்து, நாட்டிலே ஆதரவு பெருகிடும் நிலை வளர்ந்ததும், ஆந்திரர் வேறு, கர்னாடகர் வேறு, கேரளத்தார் வேறு, எங்ஙனம் அவர்களை இணைத்து ஆட்சி நடக்கும்; ஆகாதே! கூடாதே! ஆபத்தாயிற்றே! என்று கூச்சலைக் கிளப்பி, தனி அரசுத் திட்டத்தைத் தகர்க்க நினைக்கிறார்கள்—அதற்கு, ‘தமிழ்நாடு’ கேட்போர், ‘திராவிடநாடு’ திட்டத்துக்கு எதிர்ப்பாகக் கூறும் காரணங்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அதுபோலவே, தமிழ் நாடு தனி நாடு ஆதல்வேண்டும் என்ற உரிமை உணர்ச்சியை உருக்குலைக்க, திராவிடநாடு கேட்பவர்கள் பேச்சினை எடுத்துப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
இந்தியப் பேரரசினர் மேற்கொள்ளும் இந்தப் போக்குக்கு உள்ள நோக்கம், ‘ஏக இந்தியா’ காப்பாற்றப்படவேண்டும் என்பதாகும்.
தமிழ்நாடு தமிழருக்கே எனும் முழக்கம், எழுப்பப்பட்ட போது, எலி வளை எலிகளுக்கே என்றுதான் ஏக இந்தியாக்கள் கேலிக் குரலொலி கிளப்பின.
திராவிடநாடு திராவிடருக்கே என்ற இலட்சிய முழக்கம் எழுந்தது; திராவிடம் திராவிடம் என்று இரைச்சலிட்டன, ஏக இந்தியாக்கள்!
இப்போது, தமிழ்நாடு கேட்போரைக்கொண்டு, திராவிட நாடு திட்டத்தைத் தாக்கவைத்து, தகர்த்திடலாம் என்பது, ஏக இந்தியாக்களின் நப்பாசை!!
திராவிடநாடு திட்டத்தைத் தாக்க, தமிழ்நாடு கேட்போருக்கு வாய்ப்புத் தேடிக்கொடுத்த பிறகு; தமிழ்நாடு தமிழருக்கே என்ற திட்டத்துக்கு வலிவு ஏறிவிட்டால், ஏக இந்தியா என்ன செய்யுமெனில், முன்பு எழுப்பிய முழக்கம் இருக்கவே இருக்கிறது, எலி வளை எலிகளுக்கே?— அதனைக் கருவியாக்கிக் கொள்ளும்.
எந்த முறையைக் கையாண்டாகிலும். யாரை யார்மீது ஏவிவிட்டாகிலும், உரிமை உணர்ச்சியை, விடுதலை வேட்கையை, தன்னாட்சி ஆர்வத்தை ஒழித்தாகவேண்டும். என்பது ஏக இந்தியாக்களின் திட்டம்.
ஏக இந்தியாக்களின் இந்தச் சதித்திட்டம் புரியும் எவரும், தனி அரசு உணர்ச்சிக்கு ஊறு தேடிடத்தக்க கேடான முறை-