பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

223

இராமசாமி, பேச்சில் பூங்காற்று வீசும்! பூரிப்பு எழும்! பெரியார் பேச்சு, புயலைக் கிளப்பும், மரங்கள் விழும்! சர். ஏ. இராமசாமி இலையைக் காட்டி மரத்தின் தன்மையை விளக்குவார்! பெரியார். மரத்தையே பெயர்த்தெடுத்துக் கொண்டு வந்து கீழே போடுவார்! சர். இராமசாமியின் பேச்சைக் கேட்பவர்கள் கனிவு காட்டுவர். கடுங்கோபம் எழும் காங்கிரசின் மீது, பெரியார் பேசக் கேட்டால்! சம்மட்டி அடி கொடுப்பார், பெரியார்!

எல்லாம் சரி! ஆனால் பலன்? பெரியாரின் பேராற்றலைத் துணையாகப் பெற்ற ஜஸ்டிஸ் கட்சி, தேர்தலில் வெற்றிபெற வில்லை—அடியற்ற நெடும்பனையென வீழ்ந்தது. எங்கும் தோல்வி! எல்லோரும் தோற்றனர்! பெரியாரின் ‘ஜாதகம்’ அப்படி! அவருடைய பேச்சுக்குக் கிடைக்கும் பலன் அவ்விதம்!

அன்று பெரியாரின் பேராற்றலைத் துணைகொண்ட ஜஸ்டிஸ் கட்சி, அதற்கு முன்பு பெற்றிருந்த இடத்தை இழந்து, தோற்று ஒழிந்தது; இன்று பெரியாரின் பேராற்றலின் துணை காங்கிரசுக்குக் கிடைக்கிறது!!

ஜஸ்டிஸ் கட்சி தோற்றுவிட்டபோது, பெரியார், வருத்தப்பட்டாரா? எவ்வளவோ பெரியவர்கள், நல்லவர்களாயிற்றே, தோற்றுவிட்டார்களே, என்று துயரப்பட்டாரா? அதுதான் இல்லை!

தொலையட்டும் சனியன்கள்! தெரியும் எனக்கு அப்போதே! மடப்பசங்க ஒழியட்டும்! நாமம் விபூதி போட்டுக்கிட்டு ஊரை ஏய்த்தா. நடக்குமா! தோற்றான்கள். சுயமரியாதையத்த ஆசாமிகள்!

என்றுதான், நண்பர்களுடன் பேசினார்; மகிழ்ச்சியுடன்.

அதேதான், காங்கிரசு தோற்கும்போதும்.

தெரியும் எனக்கு அப்போதே!

கதர். கதர்னு கத்தினபோதே தெரியும்!

திட்டம் திட்டம்னு உளறினபோதே தெரியும்!

என்று சொல்லிவிட்டுப், பெரியார் சந்தோஷம் கொண்டாடுவார்! அது அவருடைய சுபாவம், அவருக்குத்

தேர்தலில் நம்பிக்கை கிடையாது!