பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

27

கடிதம்: 138

அழியாச் செல்வம்

சிற்பியும் திறமையும், கருத்துக் கதை—
தி. மு. க. வின் கட்டுக்கோப்பு—
திருப்பரங்குன்ற மாநாடு—

தம்பி!

அவன் சிற்பி அல்ல—ஆனால் மனதை ஈர்க்கும் காட்சிகளைக் காணும்போதெல்லாம், என்றென்றும் காண்போருக்குக் களிப்பூட்டும் விதமாக, இந்தக் காட்சிகளைச் சிற்பி செதுக்கித்தர மாட்டானா! என்று எண்ணுவான்—ஏங்கக்கூடச் செய்வான்.

அகன்ற தாமரைமீது அமர்ந்து துயிலுறும் அன்னப் பெடை, குஞ்சுகளுக்குத் தீனியூட்டும் பறவை, கன்றின் முதுகைத் தன் நாவினால் தடவி மகிழும் பசு, ஏதோ அரவம் கேட்டுக் காதுகளை நிமிர்த்தியபடி, மிரட்சி கொண்ட கண்களுடன் நிற்கும் புரவி, களத்திலே ஏற்பட்ட வடுக்கண்டு நண்பன் விளக்கம் கேட்க, அதனைக் கூறிடும்போது கண்களிலே வீரக்களை சொட்டும் நிலையிலுள்ள போர்வீரன்,—இவை போன்ற காட்சிகளைக் காணும் போதெல்லாம், சிற்பி இவைகளைச் செதுக்கி வடிவம் கொடுத்து, எப்போதும், அந்த அழகு