பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

29

பாரே புகழும்! கலை உலகே பாராட்டும்!—என்கிறான். புகழ்! தேன்!! ஆமாம்! ஆனால், முதலில் பசிப்பிணியல்லவா போகவேண்டும்— பிறகல்லவா, தேனென இனிக்கும் புகழ்!!

ஏற்றமிகு எண்ணம் இருக்கிறது இவனுக்கு; நேர்த்திமிகு கலைத்திறன் இருக்கிறது நமக்கு!! ஆனால் வயிறு வேறு இருந்து தொலைக்கிறது!!—என்று எண்ணிக்கொள்வான், சிற்பி.

ஓடோடி வந்தான் இளைஞன் ஓர் நாள்! தைலம் போன கட்டைபோன்ற உடல். கல்லாமையைக் காட்டிடும் கண்கள்—இப்படி உள்ள சீமானைக் கட்டுடலும் கருணை பொழியும் கண்களும் உடையோனாக்கிக் கொண்டிருக்கிறான் சிற்பி! உளிக்கு வாயுண்டா, ஏன் இந்த அக்ரமம் என்று கேட்க!!

“அருமையான காட்சி! அகிலம் பார்த்துக் கொண்டே இருக்கவேண்டிய காட்சி!”

“களிநடமிடும் கன்னியைக் கண்டாயோ?”

“இல்லை, சிற்பியாரே! கன்னியை அல்ல! ஒரு காளையைக் கண்டேன்.”

“நம் நாட்டு வீரனோ?”

“காளை, சிற்பியாரே! காளை! வீரன் அல்ல!”

“உண்மையான காளையா? அதிலென்ன அருமை கண்டனையோ?”

சிற்பியாரே! என்னென்று கூறுவேன் அதனை. காளை வலிவுள்ளது! அழகானது! சந்தனமரத்தைத் தழுவிக் கொண்டுள்ள ஒரு பச்சைக் கொடிமீது இச்சை கொண்டு, இடையே படர்ந்திருந்த நச்சுக்கொடிகளைக் காணாமல், பாய்ந்து சென்றது. கொடிகள், காளையின் கால்களை இறுக்கிக் கொண்டன! விடுபடப் பலம் கொண்டமட்டும் முயற்சி! முயற்சிக்க முயற்சிக்கக் கொடிகள் காலிலும் கழுத்திலும் சுற்றிக்கொண்டன. திணறும் நிலை காளைக்கு! அரிமாவோ என்று எண்ணுவர், அதன் அலறல் ஒலி கேட்டு! சுற்றிக் கொண்டுள்ள கொடிகளை அகற்றப் போராடுகிறது, காலால், கொம்பினால், கொடிகளை அறுத்தெறிந்தபடி! கண்களிலேகூட நீர் வடிகிறது. முள் குத்தியதால்! உடலெங்கும், கொடியிலுள்ள முட்கள், கீறியதால் இரத்தத் துளிகள்! காளை. கருப்பு நிறம்! இரத்தத்துளிகள் உடலிலே! சிறிது நேரத்திற்கெல்லாம்