பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

கருப்பும் சிகப்பும் கலந்ததோ என்று எண்ணத்தக்க விதமாயிற்று, உடல்.”

“பொறு! பொறு! சந்தனமரம்! அதிலே பச்சைக்கொடி! பாயும் காளை! அதனைப் பற்றிக்கொண்ட கொடிகள்! விடுபடக் காளை போரிடுகிறது! அற்புதமான காட்சிதான்! சிலைவடிவமாக்கினால் கலை உலகே புகழும்.”

“ஓடோடி வந்தேன், கூற.”

“போராடும் காளை எனும் சிலை வடிக்கச் சொல்லத்தானே!”

“அல்ல, காளையின் நிலையைப் பார்த்ததும், எனக்கு, வேறோர் நினைவு வந்தது.”

“என்ன நினைவு?”

“அடிமைப்படுத்தப்பட்ட வீரன்! கட்டுண்டு கிடக்கிறான் தளைகளால்! தளைகளை அறுத்தெறிந்து விடுதலைபெறப் போரிடுகிறான்! கட்டுடலைச் சுற்றிக்கொண்டிருக்கும் இரும்புச் சங்கிலிகளை, உடலை வளைத்தும் நெளித்தும் அறுத்தெறிய முயல்கிறான். அப்படியொரு சிலை சமைக்கவேண்டும். கொடுமைப்படுத்துவோர் எங்கு இருப்பினும், அடிமைப்படுத்தப்பட்டோர் எவரெனினும், அந்தச் சிலையைக் கண்டதும், வீரம் கொப்பளிக்கும்—விடுதலை ஆர்வம் பீறிட்டெழும்.”

“சிலைகண்டு, சிற்பியே மகிழ்ந்தான்! சிந்தனையாளன், வானத்து நட்சத்திரங்களை எல்லாம் பறித்தெடுத்து மாலையாகத் தொடுத்து, உமக்கு அணிவிக்கும் திறம் எனக்கு இல்லையே என்றான். உன் புகழுரை அதனினும் மிகுதியானது என்றான் சிற்பி. ஊர் நடுவே சிலையை அமைத்தனர், அனைவரும் காண! கண்டனர்! கண் சிமிட்டினர்! அவரவர் தத்தமது அலுவலைக் கவனிக்கச் சென்றனர்.”

கண்டவர், வைத்த கண் வாங்காமல் நிற்பர்! பாராட்டுவர்! உற்றார் உறவினரையும் நண்பர்களையும் அழைத்துவந்து காட்டுவர்! இந்த அருமையான சிலையை வடித்தெடுத்த சிற்பியைக் காணத் துடிப்பர் — அவன் பணிமனையைக் கலைக்கோயில் என்று புகழ்வர்! என்றெல்லாம், சிந்தனையாளன் எண்ணினான்.