31
கல்லால் ஆன சிலையா இது! உயிருடன் ஓர் வீரன், தளைகளை அறுத்தெறியப் போராடுவது போலவேயன்றோ தெரிகிறது!— என்று பலரும் பேசுவர்! காட்சி கற்பனையா? எங்கேனும் நடைபெற்ற வீரச் செயலா? என்று கேட்பர்! கொடியினை அறுத்தெறியப் போரிட்ட காளையைக் கண்டதால் எழுந்த சிந்தனை, இச்சிலையாயிற்று எனச் செப்பி மகிழலாம். என்று எண்ணினான் சிந்தனையாளன்.
அவரவர்கள், அவரவர் அலுவலைக் கவனிக்கிறார்கள்—சிலையைப் பார்த்துவிட்டு!
புன்னகை செய்கிறார்கள்—சிலர் பெருமூச்செறிவதும் தெரிகிறது! ஆனால், சொக்கிப் போய் நிற்கவில்லை! வியப்புடன் விளக்கம் கேட்கவில்லை! வேலைகளைக் கவனிக்கிறார்கள். வேலை இருக்கிறதே நிரம்ப! ஏற்றுக் கொண்ட வேலைகள்! வயிறு இருக்கிறதே!!
சிற்பிகூட இதைத்தானே முன்பு சொன்னான். சிந்தனையாளன், அதை எண்ணிக்கொண்டான்.
கலைக்கூடம் சென்று, கன்னத்தில் கை வைத்தபடி உட்கார்ந்தான்.
“கவலை எதற்காக அப்பா?”
“கருத்தற்ற மக்கள்! கலை அறிவு துளியுமற்ற மக்கள்! கண்ணற்ற மக்கள்!”
“கண்ணற்றவர்கள் அல்ல அப்பா! கண் இருக்கிறது காண! ஆனால், வயிறு இருக்கிறதே!”
“வயிறு! வயிறு! வயிறு! கேட்டுக் கேட்டுக் காது குடைகிறது, இந்தப் பேச்சை.”
“காது கேட்காது! கண் பஞ்சடைந்து விடும் வயிறு காய்ந்தால். அதைத் தெரிந்துதான், கண்டுவிட்டு, அவரவர் வயிற்றுப்பாட்டைக் கவனிக்கச் செல்கிறார்கள்.”
“வாயாரப் பாராட்டினால் என்னவாம்? கலை அறிவு இருந்தால்தானே!”
“கலை அறிவு இருக்கிறது. கண் இருப்பதால். ஆனால், பாராட்ட நேரம் இல்லை! வேலை இருக்கிறதே நிரம்ப! ஏற்றுக் கொண்ட வேலை! வயிறு இருக்கிறதே!”