பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

33

“அழகுச் சிலையைக் காண்பது; வாய்மூடிக் கிடப்பது! இது ஒரு இயல்பா!!”

“ஊரே வியப்புற்று ஓடோடி வந்து சிலையைக் கண்டு, அதுபற்றிப் பரபரப்புடன் பேச வேண்டும் என்கிறீர்.”

“எதிர்பார்த்தேன்!”

“ஏமாற்றம் அடைந்தீர்! எரிச்சலும் கொண்டுள்ளீர்.”

“ஆமாம்! ஊரே இந்தச் சிலைப்பற்றியே பேசவேண்டும்— மற்ற எதனையும் மறந்து! என்று எதிர்பார்த்தேன்.”

“பேசச் செய்கிறேன்.”

உளி ஏந்துவோனின் இந்தப் பேச்சைக் கேட்டுச் சிற்பியும் சிந்தனையாளனும் திடுக்கிட்டுப் போயினர்.

சிற்பி, சிந்தனையாளனுக்கு ஆறுதல் கூறினான் — ஆனால். அவன் மனமும் குமுறிக்கொண்டுதான் இருந்தது. கலைத்திறனுக்கு—ஓர் எடுத்துக்காட்டாக விளங்குகிறது சிலை! எனினும், வியப்பை, மகிழ்ச்சியை, புகழுரையைக் கூற எவரும் துடிதுடித் துக்கொண்டு வராதது, சிற்பிக்கும் சங்கடமாகத்தான் இருந்தது. இவ்வளவுதான் மக்கள்! என்று எண்ணிக்கொண்டான். சலிப்பு!

கட்டுடல் மட்டுமல்ல, தளைகளை அறுத்திட முனையும் போது, நரம்புகள் எவ்விதம் புடைத்து இருக்குமோ அந்த நுணுக்கம்கூடத் தெரிந்தது சிலையில்! ஒருபுறமுள்ள தளை அறுபடும் நிலை ஏற்படும்போது, புன்னகை! ஆனால், அதேபோது வேறோர் புறம்; தளை சதையை மென்று தின்றுவிடுவது போல இறுக்கிக்கொண்டிருப்பதால் வேதனை! இரண்டுமே, சிலையிலே காட்டினான் சிற்பி!

சிலை சமைப்பதிலே, தான் காட்டியுள்ள திறமையை, சிலையின் தரத்தைக் குறித்து எவரும் பேசாதது, சிற்பிக்கு வருத்தமாகத்தான் இருந்தது. ஊரே திரண்டுவந்து பாராட்டும் என்றுதான், அவனும் எதிர்பார்த்தான்.

வீரன்- கட்டுண்டவன்—தளை அறுத்தவன்—இந்நிலையுள்ள சிலைகளைப் பலரும் சமைத்தனர்—முன்பு.