பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

கழகத்திலே வலிவு குறைந்துவிட்டது; தூற்றல், தாக்குதல், ஆகியவற்றால் கழகத்தின் வாய்ப்புகள் கெட்டுவிட்டன. என்ற எண்ணம், கவலை, கலக்கம், பீதி, துளியேனும் தோழர்களிடம் இருந்திருக்குமானால், யாருடனாவது கூட்டுச் சேர்ந்து, எந்தெந்தக் கட்சிகளின் துணையையாவது கொண்டு, தேர்தலில் நிற்கவேண்டும்; பல கட்சிகளின் ‘கூட்டும்’ உதவியும் இருந்தால்தான், தேர்தலை நாம் சமாளிக்க முடியும்; தனி தேர்தலில் வெற்றிதேடிக் கொள்ள முடியாது என்ற முறையில் பேசியிருப்பர். மாற்றார் கூறுவதுபோலவும், மனப்பேதப்பட்டோர் விரும்புவதுபோலவும், கழகம் வலிவு குன்றி இல்லை. எனவேதான், தோழர்கள் நமக்குள்ள வலிவு கொண்டு நாம் தேர்தலில் ஈடுபடலாம் என்ற எழுச்சியுடன், நம்பிக்கையுடன் பேசினர்!

ஆயிரவர் கூடிப்பேசி ஆர்வம் கண்ட நிகழ்ச்சிமட்டுமல்ல, தம்பி! அடுத்த திங்கள், இருக்கிறது. நல்விருந்து; பொது மாநாடு! எத்தனை இலட்சம் மக்கள் கூடப்போகிறார்கள் என்பதை எண்ணிப்பார்!!

வெட்டவெளியிலே, கொட்டும் மழையிலே கூடினோம் முன்னேற்றக் கழகம் துவக்க.

மூன்றாவது பொது மாநில மாநாடு கூடுகிறது! இதற்கு, மதுரையம்பதியில் தோழர் முத்துவுடன் சென்று, திடல் தேடினேன் — மதுரை நகருக்குள், நாம் விரும்புகிற அளவு பெரிதான, வசதியான, திடல் இல்லை!

வளர்ச்சியின் வகையும் அளவும் தெரிகிறதல்லவா!!

திருப்பரங்குன்றம் செல்கிறோம், மாநாடு நடத்த!

மதுரையிலிருந்து எத்தனை கல் தொலைவு என்கிறாயா?

அது எங்கே உனக்கும் எனக்கும் தெரியப்போகிறது!! திருப்பரங்குன்றமே புதிய மதுரையாகக் காட்சி தரப்போகிறதே! இலேசான ஆட்களா மதுரைத் தோழர்கள்! திருப்பரங்குன்றத்தைத் திருநகர் ஆக்குகிறார்கள்—திருவிடமாக்குகிறார்கள்!!