51
எண்ணியதால்! தி. மு. கழகம், அஞ்சி அஞ்சிச் சாவோரைக் கொண்ட அமைப்பா! அல்லது உயிரிழக்க அஞ்சாத உத்தமரின் உறைவிடமா? பித்து மனம் கொண்டோரா? சித்தம் தடுமாறாச் சீலரா?
திருப்பரங்குன்றம் எடுத்துக்காட்டும், எதையும் தாங்கும் இதயம் கொண்டவரின் பண்பகம் தி. மு. க. எனும் உண்மையை.
கண்ணீர்த்துளிகளே! நாட்டின் கண்மணிகளே! கடமை அழைக்கிறது! உலகு கவனிக்கிறது! ஊராள்வோர் உற்று நோக்குகிறார்கள்; உலைவைப்போர் முணுமுணுக்கிறார்கள்!
வாளுக்கும் வேலுக்கும் மட்டும் அல்ல, வஞ்சனைக்கும் அஞ்சிடமாட்டோம் என்று அணியணியாய் வந்து கூடி அறிவிப்பீர், அவனிக்கு.
அகமும் முகமும் மலர! தரமும் திறமும் விளங்க! வீரமும் தீரமும் மிளிர! வெற்றிப் புன்னகை தவழ! வீரர்காள்! விரைந்து வாரீர்! திருப்பரங்குன்றம்!! —தம்பி நாடெங்கும் சென்றிடுவாய், நல் அழைப்புத் தந்திடுவாய்.
துணிவோர் தொகை காட்டிட
பொன் இருந்திட, பொருள் இருந்திட, திருவிடத்திலே. போக்கற்ற நிலையில் மக்கள் இருந்திடுவதேன்?
கண் இருந்தும் ஒளி இருந்தும், கட்டிப் போட்டு விட்டால்,
மலரும் மானும். கனியும் பிறவும், காண முடியுமா? திராவிடம் கட்டுண்டு கிடக்கிறது! திராவிடர் தேம்பித் தவிக்கின்றார்! திராவிடநாடு திராவிடருக்கே! முழக்கம் இது; வெற்றி எப்போது? வேலுக்கும் வாளுக்கும் அஞ்சா வீரம். சூதுக்கும் சூழ்ச்சிக்கும் சாயாநெஞ்சம், பதவிக்கும் பவுனுக்கும் இளிக்காப் போக்கு, இவைகொண்டவர் தொகை வளர்ந்து விட்டால், கொடிகட்டி நாம் ஆள்வோம் திராவிடத்தை! விடுதலை வரலாறு தரும் பாடம் இது. இன்பத் திராவிடம் பெற்றிடத் துணிவோர் தொகை எவ்வளவு என்பதைக் காட்டிடத் திருப்பரங்குன்றம்.