பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

திராவிட முரசொலிக்க

பரலோகத்துக்கு வழி காட்டவேண்டிய பாதிரியார், அரசு அமைக்கும் காரியத்தில் ஈடுபடலாமா! என்று ஒருவன் கேட்க, பரலோகம் அனுப்பித்தான் வருகிறார் பாதிரியார், அப்பாவிகளை நம்மீது மோதவிட்டு, சாகடித்து, என்று கேலி பேசினான் மற்றொருவன், அன்று! இன்று, சைப்ரஸ் தனிநாடு, தனி அரசு. மகாரியாஸ் பாதிரியார் விடுதலை பெற்றளித்தார்.

சைப்ரஸ் சிறுதீவு! திராவிடம் ஒப்பற்ற நாடு!

சைப்ரஸ் விடுதலை பெற்றது! திராவிடம் இன்றும் அடிமை! ஏன் ?திருப்பரங்குன்றம், இதை ஆராயத்தான் ஐயம் கொண்டோர் விளக்கம்பெற, அச்சம்கொண்டோர் வீரம்பெற, அவனிக்கு நமது முயற்சியை அறிவிக்கத் திருப்பரங்குன்றம்.

திருப்பரங்குன்றம், திக்கெட்டும் திராவிட முரசு ஒலித்திட!

திராவிடர் எனில்...

முடியுடை மூவேந்தர் இவர் முன்னோர்; இன்று நமது அடிபணிந்து கிடக்கின்றார் இழிந்து! டில்லி கூறுகிறது—நாம் கேட்கிறோம். உயிரும் இருக்கிறது! உணர்வும் இருக்கிறது! எனினும் மானம் காத்திடுவோர் தாயகம் மீட்டிடுவோம், அரசு அமைத்திடுவோம் என்று ஆர்த்தெழத்தான் வேளை வரவில்லை! அது எப்போது? விடுதலை, எம்முறையில்? அப்பணிபுரிய, எத்துணை வீரர்? இவைகளுக்குப் பதில்காண, திருப்பரங்குன்றம்.

திராவிடர் எனில் வாரீர்! விடுதலை விரும்பிகள் எனில் வந்திடுவீர், திருப்பரங்குன்றம்;—என்று அழைத்திடுவாயன்றோ. இன்பத் திராவிடத்துள்ளோரை எல்லாம். உனக்கா தெரியாது!! தாயகம் விடுபடத், தனி அரசு கண்டிடத் தளராது உழைத்திடத் திரண்டு வாரீர் திருப்பரங்குன்றம் என்று இப்போதே அழைத்துக் கொண்டுதானே இருக்கிறாய்!!

ஆர்த்தெழுவோம்

நாமிருக்கும் நாடு நமது என்றுரைத்திடா நாவும் நாவென்றுரைத்திட நல்லோர் கூசுவர்.

நாமிருக்கும் நாடோ நம்மிடம் இல்லை. நம்மை வடவர் ஆளுகின்றார்; சகிப்பதற்கில்லை!