பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

53

பொன்னை, பொருளை இழந்திடலாம், உரிமை இழப்பதோ? உரிமையற்ற வாழ்வு கண்டு உலகம் சிரிக்காதோ? இந்த உண்மைதனை உணர்ந்தோரெல்லாம் திரண்டு வருகிறார், உரிமைப் போரின் அணிவகுப்பை அமைக்க வருகிறார்! திருவிடத்தின் விடுதலைக்கு உழைத்திட நாமே திருப்பரங்குன்றம் சென்று ஆர்த்தெழுவோமே!!

எல்லாக் கண்களும் அப்பக்கம்

எழுச்சியின் அளவு, வகை, கண்டு களித்திட ஏற்ற இடம் திருப்பரங்குன்றம். எல்லாக் கண்களும் அப்பக்கம்! எல்லார் எண்ணமும் அதுபற்றி! இன்றே நண்பரைக் கண்டிடுவீர்! மாநாடு காண அழைத்திடுவீர்! குடும்பத்துடன் வந்து காண வேண்டிய குதூகலாபுரி திருப்பங்குன்றம்.

கார்கண்ட உழவன்போல், கதிரவன் கண்ட கமலம்போல, கண்டதும் விழியில் மகிழ்ச்சி பொங்கும். வீரரின் நெஞ்சினில் விடுதலை ஆர்வம் கொந்தளிக்கும், அணிவகுப்பின் திறம் கண்டு. ஆர்வத்தின் அளவு கண்டு. விழிப்புற்ற திராவிடத்தின் வீரரெலாம் கூடுகின்றார், வெற்றிக்கு வழி காண, திருப்பரங்குன்றம்.

மரபு அறிந்தவர், மானம் காப்பவர், இனம் அறிந்தவர், இலட்சியம் மறவார், உழைத்திடுபவர், கழைக் கூத்தரல்ல!! இன்னுயிர் கொடு! இன்பத் திராவிடம் பெற! கட்டளை அஃது எனில், காளையரும் கன்னியரும் போட்டியிடுவர். உயிர்தர உரிமைபெற முதியவர் இளைஞரை முந்திக்கொண்டேர் வருவர், எந்தையர் நாடு விடுதலை பெற்றிட ஈந்தேன் இன்னுயிர் என்று கூறியே!

இல்லங்களிலே

தம்பி! இல்லங்களிலே இப்போதே நடைபெறும் இன்ப உரையாடலை, நான் அறிந்துதான் இருக்கிறேன்.

“நேற்றிருந்த கோபம்மாறி, நேர்த்தியானதே! முகம் பார்த்திடும்போதே! கேட்கக் கேட்க மொழியும் பாகாய், இனிக்குது இன்று”

“காரணத்தைக் கூறிடவும் வேண்டுமோ அத்தான்? கண்டிடலாம் மாநாடு, என்றுரைத்தீரே!”