பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

அரியதோர் அணிவகுப்பு திருப்பரங்குன்றம், எனும் பேருண்மையை, உழைத்த உத்தமர்களே, உம்மை இகழ்கிறார்கள் — கொள்கைக் குன்றுகளே. உம்மைக் கேலி பேசுகிறார்கள். இனமறிந்த ஏந்தல்களே, உம்மை ஏளனம் செய்கிறார்கள். கழகம் கலகலத்துவிட்டதாம், அணிவகுப்புச் சிதறிவிட்டதாம், நம்பிக்கை நசித்துவிட்டதாம். பதில் என்ன தருகிறீர்கள்? பேசவேண்டாம், ஏசவேண்டாம், திருஇடம் காணவிழைவோர் அனைவரும் திருப்பரங்குன்றம் உலாவருவீர், பேச்சு அடங்கிக் கிடப்பர் மாற்றாரின் கைப்பாவைகள். மகத்தான பொறுப்பு. கழக மாண்புகாப்பது. கழகம் அழைத்தால், அனைவரும் எழுவோம் என்பதை அறிவிக்க, திருப்பரங்குன்றம்.

அறவழி

தோகையில்லை, மயில் தான்; குளிர்ச்சியில்லை, நிலவு தான்; ஒளியில்லை, மணிதான்; சுவை இல்லை, கனிதான்; அணியில்லை, பாட்டுத்தான்; மழலை இல்லை, குழவிதான்; மணம் இல்லை, மலர்தான்; கூறுவரோ எவரேனும்? கேட்டிடின் கைகொட்டிச் சிரிப்பரன்றே. ஆனால், தனி அரசு இல்லை, திராவிடர்தான், என்றன்றோ இன்றுள்ள நிலை. கேலிக்கூத்தல்லமோ, கேவல நிலைமையன்றோ! பகை முடிப்போம், பழி துடைப்போம், அறவழி நின்று திருவிடம் பெறுவோம். திருப்பரங்குன்றம் வழி காட்டும் கோட்டம்.

வீரக்கோட்டம்

அச்சம், அவனை அடக்கியதில்லை; ஆசை அவனைக் கட்டுப்படுத்தியதில்லை; அரண்மனை கண்டு அவன் சொக்கினதில்லை; மாளிகை தரும் மதுரவாழ்வு வேண்டினவனல்ல. நிந்தனை தந்தனர்; நிலாச் சோறு என்றான். வேதனை வேண்டுமளவு உண்டான்; எனினும், “திராவிட நாடு திராவிடர்க்கே” எனும் இலட்சியத்தை கடந்தானில்லை, அவனே திரரவிடத் தீரன். திராவிடத்துத் தீரரெல்லாம் திரண்டு வருகின்றார் திருப்பரங்குன்றம். தாயகத்தின் தளை நொறுக்கிட, தன்மானத் திறம் பெருக்கட, தனி அரசுதனைச் சமைத்திட, நான், நான், நானுந்தான், என்று முழக்கமிடும் வீரர் கூட்டம் திரண்டிடும் அரிய கோட்டம் திருப்பரங்குன்றம். இலட்சக் கணக்கான இல்லங்களில் ஏற்பாடுகள்..... இப்போதிருந்தே இளைஞருடன் முதியவர் போட்டியிடுகின்றனர். ஆடவரும்