பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

79

உங்கள் சட்டப்படி!! ஆனால் அதனை நான் செய்யாதிருந்தால். நான், என் நாட்டுக்கு, மக்களுக்கு மாபெருந்துரோகியாவேன்! அதனை அறிந்தே அடிமைத்தனத்தை எதிர்க்கும் காரியத்திலே ஈடுபட்டிருக்கிறேன்! சட்டம் அதைக் குற்றம் என்று கூறுகிறதா? கூறட்டும்! நீங்கள் காட்டும் சட்டத்தைவிட, மேலான சட்டம் ஒன்றுக்கு நான் கட்டுப்பட்டவன்! அது, நாட்டு விடுதலைக்காகப் பாடுபட்டாகவேண்டிய கடமை!

இங்கு, சட்டங்களை அலசுவார்கள்; ஆராய்வார்கள், மறுப்புகள், குறுக்குக் கேள்விகள் கிளம்பும். அறிவேன். ஆனால், நியாயம் பெற இது அல்ல இடம் என்பதை அறிந்திருக்கிறேன். வழக்குமன்றத் தலைவரிடம் மதிப்புக் குறைவு அல்ல—இந்த வழக்குமன்றம், சட்டம் இவையாவும், என் நாட்டை அடிமைப்படுத்திவிட்டுள்ள அந்நியனின் கைப்பாவைகள்! எடுபிடிகள்! ஏவலர்கள்! இங்கு, நியாயம் எப்படிக் கிடைக்கும்? எதிர்பார்க்கத்தான் முடியுமா?

தண்டனை தாருங்கள்! தாராளமாக! நீண்டகாலத் தண்டனையாக!! விடுதலைப் போரில் ஈடுபடுபவனுக்கு அதனினும் மேலான பேறு இல்லை; அதனினும் மேலான மகிழ்ச்சி தரவல்லது—ஒரு சமயம், விடுதலைப் போரிலே மடிவது, அல்லது விடுதலை பெறுவது என்பதன்றி—வேறு எதுவாகவும் இருக்க முடியதல்லவா?

சிறையில் தள்ளுங்கள் என்னை! என் ஆருயிர்த் தோழர்கள், பெருமதிப்புக்குரியோர், சிறையில் உள்ளனர்; நான் வெளியில் இருக்கிறேன்; இதுதான் தாங்கமுடியாத வேதனை! என்னை, என் தோழர்கள் உள்ள இடத்துக்கு அனுப்புங்கள்!!

இந்த நாடே பெரிய சிறைக்கூடம்! இதிலே உள்ளே சென்றால்தானா சிறை! அளவுதான், பெரிது, சிறிது! நிலைமையில் வித்தியாசம் இல்லை! தண்டனை தரக் கூடியுள்ள இடத்தில், வாதாடிக் காலங்கழிப்பானேன்! கொடுப்பதைச் சற்றுக் கடினமானதாகக் கொடுங்கள்!!

தம்பி! வழக்கறிஞர்களிலேயே மிகக் கீர்த்தி வாய்ந்தவர். நிரம்ப வருமானம் உடையவர், வாழ்க்கையில் இன்பம் காண்பவர்; அரண்மனை போன்ற வீட்டை உடையவர்; ஆள்