பக்கம்:தம்பியர் இருவர்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ 8 தம்பியர் இருவர்

பரதனுடன் பழகும் வாய்ப்புப் பெற்றவர் பலரும் அவனைப்பற்றி என்ன நினைக்கின்றனர் என்பதை இது காறுங்கண்டோம். இராமன், இலக்குவன், தசரதன், குகன், விசுவாமித்திரன், கோசலை ஆகியவர்கள் பல திறப் பட்ட பண்பாடுடையவர்கள். கலை ஞானங்கட்கெல்லாம் உறைவிடமான இராமனும் விசுவாமித்திரனும் மட்டுமா பரதனைப் போற்றுகின்றனர்? கற்றறிவில்லாத குகனும் போற்றுகிறான். பரதன் பிறந்ததால் நேரடியாகத் துன் பத்தை அடைந்த கோசலையும் அவனைப் போற்றுகிறாள். இதிலும் ஒரு சிறப்பு இருக்கிறது. பரதனிடத்து முதலில் வெறுப்புக் கொண்டிருந்த இலக்குவன், குகன், கோசலை என்ற மூவரும் இறுதியில் அவனிடம் அளவற்ற பரிவு காட்டு கின்றனர். உலகிடைப் பிறந்து வாழும் ஒருவன் அனை வரிடமும் நற்பெயர் பெறுதல் இயலாது. ஆனால், பரதனை மேலே கூறிய அனைவரும் புகழ்கின்றனர். அதனால், அவன் உலகியலுக்கே மாறுபட்டவனாகக் காட்சியளிக் கிறான். எவ்வகை மனநிலையுடையாரும் அவன் செயலில் சிறப்பையே காண்கின்றனர். இல்லறத்தாரும் துறவறத் தாரும், ஆனும், பெண்ணும், கற்றவரும், கல்லாதவரும் 'உண்ணும் நீரினும் அவனையே (பரதனையே) உகப்பார்’ எனில், இத்தகைய ஒரு பாத்திரத்தை இலக்கிய உலகிற் கூடக் காண்டல் அரிதென்றே கூறல் வேண்டும். இது வரைப் பரதனைப்பற்றிப் பிறர் பேசியவற்றையும், அவனிடம் பிறர் நடந்து கொண்டதையுங் கண்டோம். இனி அவன் பிறரிடம் பேசுவதையும், பிறரிடம் நடந்து கொள்வதையுங் காண்போம்.

பெற்ற தாயாகிய கைகேயியிடம் பரதன் பேசுவதைக் காண்டல் வேண்டும். ஆனால், இந்த உரையாடலில் முழுப் பகுதியையும் அவனே பெற்றுவிடுகிறனாகலின், அதனை வேறு கோணத்திலிருந்தே காண்டல் வேண்டும்.

口口口