பக்கம்:தம்பியர் இருவர்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 6 தம்பியர் இருவர்

விருந்த சீதையைப் பரதன் சென்று காண்கின்றான். பல சேடியரும் பணி புரிய அரண்மனை இன்பத்தில் ஆழ்ந்திருக்க வேண்டிய அப்பெருமாட்டி, நடுக்காட்டில் மண் குடிசையில் கற்பே காவலாய் இருக்கும் நிலையைக் கண்ட பரதன் அக் கொடுமையைக் காணச் சகியாதவனாய், கைகளின் கண் மலர் புடைத்து அவள் திருவடிகளில் வீழ்ந்தழுகிறான். இதன் பின்னர் இராமனை மீட்க வேண்டிப் பரதன் கூறியவைகளைப் பின்னர்க் காண்போம்.

காட்டில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் இதுகாறும் பரதனுடைய உண்மை நிலையைப்பற்றிச் சரியாக அறிந்து கொள்ளாமல் இருந்த இலக்குவன் கண்களை நன்கு திறந்து விட்டன. பரதனுடைய இராம பக்தியை வேண்டும் அளவு அறிந்துவிட்டான் இளையோன்; தக்க சமயத்தில் இதைப் பயன் படுத்தவும் செய்கிறான்.

திருந்திய இலக்குவன்

மாயா சீதை ஒருத்தியை உண்டாக்கி அவளை அனுமன் எதிரே வெட்டி வீழ்த்திவிட்டு, இதோ அயோத்தி சென்று பரதனையும் ஒழித்துவிடுகிறேன்!” என்று கூறிப் போய்விட்டான் மாயம் வல்ல இந்திரசித்தன். கல்விக் கடலின் கரை கண்டு உணர்ந்த அனுமனும் இவற்றை மெய் யென்று நம்பி இராமனிடம் வந்து அழுது அரற்றி நடந்த வற்றையும் கண்டவற்றையும் கூறினான். சிதையைப் பற்றித் தான் கொண்ட பெருவருத்தம் தணியுமுன்பே பரதன் தவஞ்செய்யும் அயோத்தியை நோக்கி இந்திர சித்தன் சென்றான் என்ற சொற்கள் இராமனை மருட்டி விட்டன. பரதன் மாட்டு இராமன் கொண்ட காதல் மிகப் பெரியதாகலின், இந்நேரத்தில் பரதனுடைய வன்மையைக் கூட மறந்துவிட்டான் இராகவன்; உடனே அயோத்தி நோக்கி விரைவாகச் செல்ல ஏதேனும் வழியுண்டா என்ற ஆராய்ச்சியில் புகுந்துவிட்டான். அந்நேரத்திலேதான் இலக்குவனது அறிவு தொழிற்படத் தொடங்குகிறது.