தராசு
நம்பிக்கை கொள்ளாதவன் போலே விழித்தான். “அப்படித்தான் சென்னப்பட்டணத்தில் கேள்விப்பட்டேன். ஆச்சரியமான தராசு! உமக்கெங்கே கிடைத்தது? தமிழ் தான் பேசுமோ? இங்கிலீஷ் தெரியாதாமே? ‘வொன்-டர்-புல், வெரி, வெரி வொன்-டர்-புல்’ என்று இங்கிலீஷில் கொண்டு ஸமாப்தி பண்ணினான்.
“நீ கேட்க வந்த விஷயங்களைச் சொல். வீணாக நேரம் கழிப்பதில் பயனில்லை“ என்று நினைப்பூட்டினேன். அந்தப் பிள்ளையின் பெயர் வாஸுதேவராவ். வாஸுதேவராவ் சொல்லுகிறான்:— வாலன்டீர் பட்டாளம் சேர்க்கிறார்களே, அந்த விஷயம் உம்முடைய தராசுக்குத் தெரிந்திருக்குமென்றே நினைக்கிறேன். எல்லாம் தெரிந்து எந்தக் கேள்வி கேட்டாலும் விடை சொல்லக்கூடிய மாயத் தராசுக்கு இது தெரியாமலிருக்குமா? ‘அப்கோர்ஸ்’ தெரிந்துதான் இருக்கும். அதிலே சேரலாமா? சேர்ந்தால் பயனுண்டா? இதுவரை நம்மவர்களுக்கு தளகர்த்த பதவி கொடுப்பதில்லையென்று வைத்திருந்த வழக்கத்தை மாற்றி இப்போது புதிய விதிப்படி நமக்கு ராணுவ உத்தியோகங்கள் கொடுக்கத் தயாராக இருக்கிறார்களென்று தெரிகிறது. இது நம்பத்தக்க செய்திதானா? நான் எப்படியேனும் நம்முடைய பாரதமாதாவுக்கு உழைக்க வேண்டுமென்ற கருத்துடனிருக்கிறேன். இந்த பட்டாளத்தில் நாம் சேர்வதானால் நமது தேசத்துக்கு ஏதேனும் நன்மையேற்படுமா என்ற விஷயம் என் புத்திக்கு நிச்சயப்படவில்லை.
23