பக்கம்:தராசு.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தராசு

மறுபடியும் “இல்லை” என்றார்.

“அப்படியானால் விஷயந்தானென்ன? சொல்லுமே“ என்றேன்.

ஸேட் பின்வரும் கதை சொல்லலானார்:—

“ஒரு வாரத்துக்கு முன்பு எங்கள் வீட்டுக்கு ஒரு தமிழ்ப் பரதேசி வந்தான். எனக்கு இந்தப் பரதேசிகளிடம் நம்பிக்கை கிடையாது. எங்கள் மாமா ஒரு கிழவர் இருக்கிறாரே, அவருக்கு பயித்தியம் அதிகம். அவருடன் நெடுநேரம் வார்த்தை சொல்லிக் கொண்டிருந்தான். நானும் பொழுது போக்குக்காக ஸமீபத்திலிருந்து கேட்டுக் கொண்டிருந்தேன். இரண்டு மணிநேரத்துக்குள், மாமா மனதில் இந்தப் பரதேசி பெரிய யோகியென்ற எண்ணம் உண்டாய்விட்டது. கதையை வளர்த்துப் பிரயோஜனமில்லை. நம்பக் கூடாத, சாத்தியமில்லாத, அசம்பாவிதமான இரண்டு மூன்று ஸாமான்கள் மூன்று தினங்களுக்குள் கொண்டு வருவதாகச் சொல்லி, அவரிடமிருந்து ஐம்பது ரூபாய் வாங்கிக் கொண்டு போய்விட்டான். குறிப்பிட்ட நாளில் வரவில்லை. அதை நினைத்துக்கொண்டு கேட்டேன்.“

எனக்குக் கோபம் வந்துவிட்டது.

“உஸ், ஸேட்சாஹேப், யாரிடத்திலே காணும் இந்த மூட்டை அளக்கிறீர்? ஐம்பது ரூபாய், பரதேசி, —பாட்டி கதை. ஸம்மதமுண்டானால் மனதிலுள்ளதைச் சொல்லும். இல்லாவிட்டால், ஸௌகர்யப்படாதென்று சொல்லிவிடும்“ என்றேன்.

38

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தராசு.pdf/39&oldid=1770549" இலிருந்து மீள்விக்கப்பட்டது