தராசு
தராசு:— “கூலி வேண்டாம், ஸேட்ஜீ; இனாமாகவே ஆசீர்வாதம் பண்ணிவிடுகிறேன். உமக்கு மேன்மேலும் லாபம் பெருகும். நாட்டுத் துணி வாங்கி விற்றால்” என்றது. ஸேட் விடை பெற்றுக் கொண்டு போனார்.
கவிராயர் தராசை நோக்கி, “நம்முடைய ஸம்பாஷைணைக்கு நடுவிலே கொஞ்சம் இடையூறுண்டாகிறது” என்றார்.
தராசு சொல்லுகிறது:— “உமக்கும் அதுதான் காணும் வார்த்தை. நெசவிலே நாட்டு நெசவு மேல். விலைக்கு நெய்வதைக் காட்டிலும் புகழுக்கு நெய்வதே மேல். பணம் நல்லது; ஆனால் பணத்தைக் காட்டிலும் தொழிலருமை மேல். காசிப்பட்டுப் போலே பாட்டு நெய்ய வேண்டும். அல்லது உறுதியான, உழவனுக்கு வேண்டிய, கச்சை வேஷ்டி போலே நெய்ய வேண்டும். “மல்” நெசவு கூடாது. “மஸ்லின்” நீடித்து நிற்காது. பாட்டிலே வலிமை, தெளிவு, மேன்மை, ஆழம், நேர்மை இத்தனையுமிருக்க வேண்டும். இதற்கு மேலே நல்ல வர்ணஞ் சேர்த்தால் குற்றமில்லை. சேராமலிருந்தால் விசேஷம்.”
அப்போது புலவர் தராசை நோக்கி:— “நீயே எனது குரு” என்று சொல்லி நமஸ்காரம் பண்ணினார்.
தராசு:— “எழுக! நீ புலவன்!” என்றது.
50