பக்கம்:தராசு.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தராசு

ஆக்ஷேபமில்லை. ஆனால் வைத்தியனுக்கு முக்கியமாக வேண்டியது நோய் தீர்த்துவிடுதலே. இதில், இந்த தேசம் சம்பந்தப்பட்டவரை,- ஐரோப்பிய வைத்தியரைக் காட்டிலும் எங்களுக்கு அதிகத் திறமையுண்டு. எங்களுடைய பூர்வீக மருந்துகளே இந்த தேசத்து சரீர நிலைக்கு அனுகுணமாகும்; இதை வேண்டுமானால் சோதனை செய்து பார்க்கலாம்.”

எனது நண்பர் ஒரு யோகீச்வர் இருக்கிறார். அவரிடம் இந்த இரண்டு கட்சிகளையும் சொன்னேன். அவர் சொல்லுகிறார்:- “ஒருவனுக்கு வியாதிகள் வராதபடி தடுத்துக் கொள்வது நலம். தன்னை மீறி வந்தால்—நல்ல காற்று, நல்ல நீர், நல்ல வெளிச்சம், சுத்தமான உணவு, இயன்றவரை சரீர உழைப்பு, மனோதைரியம், ஸந்தோஷம்—இவற்றால் பெரும்பான்மையான நோய்கள் இயற்கையிலேயே சொஸ்தமாய் விடும். வைத்தியர் அவசியமென்ற ஸ்திதிக்கு வந்துவிட்டால் பிறகு தெய்வ பலமுள்ளவர்கள் நிச்சயமாகப் பிழைப்பார்கள். சாகத்தான் வேண்டுமென்று தீர்ந்தால், அயல்நாட்டு மருந்தினால் சாவதைக் காட்டிலும், நாட்டு முறைப்படி சாவது நல்லது.”

“நாட்டு வைத்தியம்” என்ற பேச்செடுத்ததிலிருந்து எனக்கு வேறொரு செய்தி யோசனைக்கு வருகிறது.

நமது ஜனங்களுடைய உடம்பைப் பற்றிய வியாதிகளுக்கு மருந்து கொடுப்பதைப் பற்றிப் பேசினோமா?

6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தராசு.pdf/7&oldid=1771097" இலிருந்து மீள்விக்கப்பட்டது