தராசு
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பதறிவு.
தோன்றிற் புகழொடு தோன்றுக, அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.
வேண்டிய வேண்டியாங் கெய்தலான், செய்தவம்
ஈண்டு முயலப் படும்.
என்ற நாலு குறளையும் சொன்னேன்.
“தராசின் கருத்தை நீர் நேரே சொல்லாதபடி, வேணு முதலியைப் போலே பாட்டில் புகுந்த காரணம் என்ன?” ராமராயர் கேட்டார்.
“தராசு ராஜாங்க விஷயத்தை கவனியாது. சண்டை முடிகிறவரையிலும் ராஜாங்க விஷயமான வார்த்தை சொல்லுவதிலே தராசுக்கு அதிக ருசி ஏற்படாது. சண்டை பெரிது; நம்முடைய கடை ஸாதாரணம்; ராஜாங்க விசாரணைகளோ மிகவும் கடிமை. ஆதலால் அனிபெஸன்டின் ராஜாங்கக் கொள்கையை நாம் நிர்ணயிக்க இடமில்லாவிடினும், அவள் சரியான ஹிந்து ஆதலால் நம்முடைய ஸகோதரி என்பதை ஒப்புக்கொள்கிறோம். ஹிந்து மதத்தை அவள் போற்றுகிறாள். அதனால் அவளுடைய ஜன்மம் கடைத்தேறும். வேதம் என்று சொன்னால் பாவம் போகும். பகவத் கீதையை நம்புகிறவர்கள் யாராயினும் அவர்கள் நமக்கு சகோதரரே. தியாசபி,’ ‘ஹோம் ரூல்’ — இரண்டுக்கும் சம்பந்தமில்லை; அது வேறு, இது வேறு. ஹிந்துக்கள் அனிபெஸண்டுக்கு நன்றி கூறவேண்டும். தமக்குத் தாமே உதவி செய்து கொள்ள வேண்டும்.”
82