பக்கம்:தரும தீபிகை 1.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தரும தீபிகை

3


இறைவன் எங்கும் நிறைந்து எல்லாப் பொருள்களிலும் தங்கியிருத்தலால் யாண்டும் யாதும் வெய்யன புரியாது தெய்வ சிந்தனை செய்து மனிதன் உய்ய வேண்டும் என்பது கருத்து.


நூல் வந்த நிலை

பூந்திரைசூழ் ஞாலம் புனிதமுறப் போதநலம்
ஏந்திசைகொண் டெங்கும் இனிதேற-மாந்தர்
மதிநலங்கண் டுய்ய வருமொருநூல் செந்தில்
அதிபதியால் கண்டேன் அகம். (3)

இ-ள்

உலகம் புனிதம் அடையவும் ஞான நலம் மேன்மையுடன் எங்கும் பெருகி வரவும், உயிர்கள் உணர்வொளி பெற்று உய்தியுறவும் செந்திற் பெருமான் திருவருளால் என் உள்ளே ஒரு நூலைக் கண்டு அதனை வெளியே கொண்டு வந்தேன் என்பதாம்.

புனிதம் உற = பாவ அழுக்கு நீங்கிப் பரிசுத்தம் அடைய. உய்யவரும் நூல் என்றதனால் இதன் உறுதி நலன் உணரலாகும்.

புதுமையும் அருமையும் தெரிய ஒரு வந்தது. செந்தில் அதிபதி என்றது திருச்செந்திலம்பதியில் எழுந்தருளியிருக்கும் முருகக்கடவுளை. உள்ளம் கவர்ந்து உயிருருக்கி என்னைக் கொத்தடிமை கொண்டுள்ள குலதெய்வம் ஆதலால் புத்தமிர்தனைய இந்த உத்தம நூலை என்னிடம் இனிதா உய்த்தருளியதென்க. உரிய அடிமையிடம் அரிய படிமையை அருளியுள்ளது.

திருவருளால் வந்துள்ளமையால் உலகமெல்லாம் நலமுற இந்நூல் என்றும் நின்று நிலவி இன்பம் அருளிவரும் என்பதாம்.


நூலின் பெயர்

உள்ளத் திருள்கடிங் தூனமிலா ஞானமெலாம்
அள்ளி யருளி அறம்விளக்கி-ஒள்ளியபே
ரின்பம் தரலால் இதுதரும தீபிகையென்
றின்பமுற வந்த திசைந்து. (4)

இ-ள்

அஞ்ஞானமாகிய கொடிய இருளை நீக்கி, மெய்ஞ்ஞான ஒளியை இனிது பரப்பி, அறநலங்களைத் துலக்கி, அரிய பேரின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/10&oldid=1439471" இலிருந்து மீள்விக்கப்பட்டது