பக்கம்:தரும தீபிகை 1.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

தரும தீபிகை


இன்பம் வீடு என்னும் அரிய பொருள்களைக் கண்டு பெரிய இன்பங்கள் பெற்றேன் என்பதாம்.

நிறம் கொண்ட என்றது சோதிசுடர்ப் பிழம்பாயா நிற்கும் அப் பெருமானது திருமேனியின் திவ்விய நிலைகருதி வந்தது. நிறம்-ஒளி. இனிய சோதி இன்ப ஒளி வீசியுள்ளது.

“பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்கு
ஓவற இமைக்கும் சேண்விளங் கவிரொளி’’

நீலக்கடல்மேல் நிலாவிநிற்கும் பாலசூரியன் போல் கோல மயில்மேல் குமாரக்கடவுள் குலாவியிருக்கும் என நக்கீரர் இங்ஙனம் குறித்திருக்கிறார்.

வேள் என்பது மன்மதனுக்குப் பேர். அவன் கரியகோல மேனியனாதலால் செஞ்சோதித் திருமேனியனான முருகநாதன் செவ்வேள் என நின்னான். அளவிடலரிய அதிசய அழகும் அற்புதநிலையும் துதிசெய்ய வந்தன.

“ஆயிரம் கோடிகாமர் அழகெலாம் திரண்டொன்றாகி
மேயின எனினும் செவ்வேள் விமலமாஞ் சரணந்தன்னின்
தூயநல் எழிலுக் காற்றா தென்றிடின் இனையதொல்லோன்
மாயிரு வடிவிற் கெல்லாம் உவமையார் வகுக்க வல்லார்?”

(கந்தபுராணம்)

என்றதனால் எம்பெருமானது ஒளிவளர் உருவும் இளமை நலனும் எழில் நிலையும் அதிசயமுடையன என்பது அறியலாகும். அவனது திவ்விய சவுந்தரியத்திற்கு யாண்டு யாரும் எல்லை காணமுடியாது. உள்ளம் உருகி நோக்கியவர் உவகை மீதூர்ந்து உய்தி பெறுகின்ருர்.

இவ் வேள் ஒருநூல் என்றது யாவரும் விரும்பிப் போற்றத்தக்கதும், இனிய புதுமையுடையதும் ஆகிய அரிய ஒர் தனிநூல் என்றவாறு. வேள் = விருப்பம். உயிர்களுக்கு உறுதிப் பொருளாகக் கருதப்பட்டுள்ள அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நான்கினையும் இனிதாக இஃது உணர்த்தியுள்ளதென்க.

இந்நூலின் இயல்பும் பயனும் இதனால் இனிது புலனாம்.

பாயிரம் முற்றிற்று.


"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/13&oldid=1439498" இலிருந்து மீள்விக்கப்பட்டது