பக்கம்:தரும தீபிகை 1.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது




முதல் அதிகாரம்

மனிதன் நிலை.

இது, மனிதனுடைய நிலைமையை உணர்த்துகின்றது. அற நலங்களெல்லாவற்றையும் ஆராய்ந்து விதிவிலக்குகளை ஒர்ந்து தெளிந்து மதிநலத்துடன் ஒழுகி உய்திகாணும் உயர்நிலையுடையன் ஆதலால் அந்தத் தனி உரிமைதெரிய மனிதனிலை முதலில் வந்தது.

1. அன்பும் அறிவும் அருளும் அமைந்தெங்கும்
இன்பம் படிய இனிதொழுகி-முன்பிருந்த
பேராத இன்பப் பெருநிலையைப் பேணுவதே
நேரா மனிதன் நிலை. (க)

இதன் பொருள்

அன்பு முதலிய பண்புகள் அமைந்து எவ்வுயிர்க்கும் இனியனாய் யாண்டும் இன்புற ஒழுகி முன்பு இருந்த பேரின்பப் பெருவாழ்வைப் பெற்று மகிழ்வதே மனிதனது உண்மையான உறுதிநிலை என்பதாம். நிலைமை தெரிந்து தலைமை பெறுக.

அன்பை முதலில் வைத்தது அதன் பண்பும் பயனும் கருதி. இந்த அரிய உடம்புள் அமைந்து மனிதன் என்னும் பேருடன் உயிர் இங்கே வந்துள்ளதற்கு வாய்த்த பயன் யாது? எனின், எங்கும் ஆதரவாய் அன்பு செய்தலே யாம். எடுத்த பிறப்பை இன்புடையதாக்கும் பண்புடைமையால் அது முன்புற வந்தது.

எந்த உயிருக்கும் இரங்கி இதம்புரிவதே அன்புருவமாம்.

அன்பின் பெருக்கே அருள் என்க. இந்த அன்பும் அருளும் உயிரை உருக்கி உயர் பரம் ஆக்கும். உயிர் அன்புடன் கனியக் கனிய அது செம்பொருளாய்ச் சிறந்து திகழுகின்றது. “அன்பே சிவம்” எனக் கருமூலங் கட்டறுத்த திருமூலர் கூறியுள்ளமையான் அதன் ஒரு மூலமான உயிர்மூலம் உணரலாம்.

அறிவை இடை நிறுத்தியது அவ்விருமையுடனுள்ள அதன் தகைமை தெரிய. அன்பும் அருளும் அறிவினுடைய இரு கண்களாய் இனிது ஒளிசெய்து வரும்; அவ்வுற வுரிமையால் அதன் இருமருங்கும் மருவி அவை கிழமை கொண்டு நின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/14&oldid=1439499" இலிருந்து மீள்விக்கப்பட்டது