பக்கம்:தரும தீபிகை 1.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1. மனிதனிலை

9


2. இனிய மொழியும் இதமார் செயலும்
கனிவு தருநெஞ்சும் கண்டான்-புனித
மனிதன் என்கின்றான் வானும் வணங்கும்
முனிவன் அவனே முதல். (௨)

இ-ள்

நெஞ்சில் இரக்கமும், வாக்கில் இனிமையும், செயலில் இதமும் ஒரு மனிதன் உடையனாயின் அவன் புனிதனாய் விளங்குவான்; அவனை வானவரும் வணங்குவார்; அவனே முனிவருள் முதல்வன் என்பதாம்.

கனிவு=தண்ணளி. கண்டான் முதல் என்று காண்க.

மனம் மொழி மெய்கள் இன்ன நிலையில் இருக்கவேண்டும் என்று குறித்தபடியிது. முக்கரணங்களும் இங்ஙனம் இனிமைப் பண்புகள் வாய்ந்திருப்பின் அவ்வுயிர் திவ்விய சோதியாய்த் திகழ்ந்து வானும் வணங்க, வையமும் துதிக்க, உய்கதியடைந்து உயர்ந்துபோம். இனியசெயல்கள் அரியநலங்களை அருளுகின்றன.

மொழியும், செயலும், நினைவும், இனிமையும் இதமும் கனிவும் கனிந்திருப்பின் மனிதன் தனிமுதல் நிலையைத் தலைப்படுவான் என்றது தரும நீர்மைகளின் பெருமை தெரிய வந்தது.

புனித மனிதன் என்றது பரிசுத்தன் என்றவாறு. பாவ அழுக்குப் படியாமையால் உள்ளம் புனிதமாகிறது; அந்தச் சித்த சுத்தி பரம பரிசுத்தனான நின்மலனை நேரே காணச் செய்கிறது; ஆகவே மாசறு காட்சியனாய்த் தேசுமிகப் பெற்றுச் சிறந்து திகழ்வன் என்க. அருள் ஒழுக்கம் அதிசய விழுப்பமாம்.



3. ஈச னிடமிருந்தே எல்லாரும் வந்துள்ளோம்
மாசகன்று நின்றால் மனிதனே-ஈசன்
எனமே லெழுவான் இழிவுறினோ நீசன்
எனவே விழுவான் இழிந்து. (௩)

இ-ள்.

நாம் எல்லோரும் ஈசனிடத்திலிருந்து பிரிந்தே இவ்வாறு வந்திருக்கிறோம்; அந்த உறவுரிமையை உணர்ந்து உள மாசுதீர்ந்து உயர்ந்து போகவேண்டும் என்பதாம்.


2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/16&oldid=1439517" இலிருந்து மீள்விக்கப்பட்டது