பக்கம்:தரும தீபிகை 1.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

தருமதீபிகை


ஏகாரம் இரக்கம் தோன்றநின்றது. பெறும்பேறு=பெறத் தக்க பயன். பேர் ஊர் சாதி குலம் முதலியனவாய்த் தோன்றுகின்ற நாம உருவங்களின் வெளித்தோற்றங்களை யெல்லாம் ஒழித்து உண்மையான ஆன்ம நிலையை உணர்ந்து உய்யத்தக்க தன்மை மனிதப் பிறவிக்கே தனியுரிமையாய் இனிதமைந்துளது. ஆகவே “தன்னை அறியத் தகவான மானுடம்” என வந்தது.

இத்தகைய அரிய உயர் பிறவியைப் பெற்றும் அதன் பயனைப் பெறாமல் வீணை விளிந்தொழிவது மிகவும் வெறுக்கத் தக்கதாம். பிறந்த பயனை விரைந்து பெறுக என்பது குறிப்பு.



6. பயிரில் களைகளைந்து பண்பாற்றி நிற்கும்
செயிரில் உழவனெனச் சேர்ந்த-உயிரில்
பழிபாவம் யாதும் படியாமல் காத்தான்
அழியாவாழ் வுற்றான் அமர்ந்து. (௬)

இ-ள்.

உழவன் களைகளைக் களைந்து நீக்கிப் பயிரை வளர்ப்பது போல் பழிபாவங்களை ஒழித்து ஒதுக்கி உயிரைப் பாதுகாப்பவன் என்றும் அழியாத இன்ப வாழ்வை அடைவான் என்பதாம்.

களைகள் பயிரைக் கெடுப்பதுபோல் பிழைகள் உயிரைக் கெடுக்கும் ஆகலால் அவை அணுகாவகை அறிந்து பேணுக. மனதில் மாசுபடாமல் ஒழுகி வருபவன் ஈசனே அடைகின்றான்.

நாளும் புகழ் புண்ணியங்களைப் பேணி ஒழுகி என்றும் காணியாகப் பேரின்ப நிலையை நேரே பெறுக என்பது கருத்து.



7. அழுகல் சிறிதோர் அருங்கனியில் பட்டால்
முழுதும் கெடுமம் முறைபோல்-வழுவான
தீமை யணுவுளத்தில் சேரினும் தீங்காகிப்
போமே புலையாய்ப் புரண்டு. (எ)

இ-ள்.

அருமையான இனிய மாங்கனியில் சிறிது அழுகல் உறினும் அது முழுதும் பழுதாய் விரைவில் அழியும்; அதுபோல், மனத்தில் அணு அளவு தீமை புகினும் மனிதன் தீயனாய் அடியோடு கெடுவான்; கெடுநிலைகளைக் கடிது கடிக என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/19&oldid=1439904" இலிருந்து மீள்விக்கப்பட்டது