பக்கம்:தரும தீபிகை 1.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1. மனிதனிலை

13


கனியை எதிர் எடுத்துக் காட்டியது மனிதனது இயல்பான இனிமையும் அருமையும் தெரிய. இனிமைப் பண்புகளுடைய மனம் அதிமதுரமான கனியை ஒத்துள்ளது; அதில் தீய எண்ணம் சிறிது மருவினும் அதனை யுடையவன் இழிந்து தானாகவே விரைந்து அழிந்து போவான்; அந்த அழிவுநேராமல் விழுமிய நிலையில் தெளிந்து வாழுக. இழிவு நீங்க உயர்வு ஓங்கி வருகிறது.

தலைமையாய் நிலவி நிற்கின்ற மனிதனை நிலைதிரித்து நீசப்படுத்தும் ஆதலால் அந்த நீசமான தீமையை நாசகாரியாக அஞ்சி ஒதுங்கி எவ்வழியும் இனிய நீர்மையனாய் ஒழுகவேண்டும்; அவ்வாறு ஒழுகிவரின் திவ்விய நிலைகளை அடைகின்றான்.

நெஞ்சைப் புனிதமாகப் பாதுகாத்து வருக; அதனால் இனிய பல மகிமைகள் உன்பால் எளிது வந்து சேரும்.



8. காட்சிக் குரிய கருவிழியில் மாசுபடின்
மாட்சி யிழந்துபோய் வன்குருடாம்-ஆட்சியுறும்
உள்ளம் கெடினே உயிர்கெட் டொளியின்றி
எள்ளல் உறுமால் இழிந்து. (௮)

இ-ள்

கண் ஒளியுள் மாசுபடின் உடல் குருடாய் இழிந்து படும்; உள்ளம் கெடின் உயிர் ஒளிகுன்றி ஒழிந்து கெடும் என்பதாம்.

கருவிழி என்றது கண்ணுள் நடுவே மிளிர்கின்ற ஒளியை.

உடல், கண், கண்மணி என்னும் இம் மூன்றும் உயிர் நெஞ்சு உள்ளம் என்பவற்றிற்கு முறையே ஒப்பாம்.

உடற்கு விழியொளி போல் உயிர்க்கு உள்ளம் என்றதனால் அதன் அருமையும் பெருமையும் அறியலாகும். உவமையை உய்த்து நோக்கிப் பொருள் நிலையை ஊன்றி யுணர்ந்து கொள்க.

கண் கெட்டாலும் குருடனாயிருந்து ஒருவாறு கதி பெறலாம்; உள்ளம் கெடினே, எவ்வாற்றானும் உய்தியின்றி உயிர் இழிந்து போம் என்க. ஆகவே, உயிர் நிலையமான அந்த உள்ளத்தைப் புனிதமாகப் பாதுகாத்து மனிதன் உய்ய வேண்டும் என்பது கருத்து. உண்மையை ஓர்ந்து தெளிந்து உய்தி பெறுக.


"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/20&oldid=1439913" இலிருந்து மீள்விக்கப்பட்டது