பக்கம்:தரும தீபிகை 1.pdf/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முகவுரை





தரும தீபிகை என்னும் இந்நூல் அருமையான பல உறுதி நலங்களை யுடையது. இந் நிலவுலகில் நிலவுகின்ற பலகோடி உயிரினங்களுள் மனிதன் மிகவும் தலைசிறந்து நிற்கின்றான். அந்நிலை உணர்வொளியால் நன்கு உறுதி பெற்றுள்ளது. தன் கண் எதிரே காணாதவற்றையும் கருதி யுணருந் திறம் மனிதவுருவில் மருவி யிருக்கின்றது. சென்றதையும் நிகழ்வதையும் எதிர்வதையும் எண்ணி ஆராய்ந்து நுண்ணிய கருமங்கள் செய்து புண்ணியங்கள் புரிந்து புனித நிலையை அடைய மனிதன் இனிது முயல்கின்றான். முயன்றும் கருதியது கை கூடாமல் மறுகி யுழல்கின்றான். இன்பமே விரும்பும் இயல்புடைய மக்கள் துன்பமடைந்து துடித்தயர்கின்றனர். அதற்குக் காரணம் வினை என விளம்பி வெகுண்டு நிற்கின்றார். வினை என்பது மனம் மொழி மெய் என்னும் மூன்று நிலைகளில் தோன்றி விளைகின்றது. இம் முக்கரணங்களும் நன்மையில் படிந்துவரின் நல்வினையாம்; தீமையில் தோய்ந்துவரின் தீவினையாம்; நல்வினை இன்பம் பயக்கும்; தீவினை துன்பம் விளக்கும். ஆகவே இன்பம் வேண்டுவோர் துன்ப மூலங்களான தீய வினைகளை யாண்டும் தீண்டலாகாது. தூய செயல்களையே தொடர்ந்து பழகி வர வேண்டும். ஒருவனுடைய கருமம் புனிதமானால் அவன் தருமவானாய்த் தழைத்து இருமை யின்பங்களையும் எளிதே எய்துகின்றான். இத்தகைய விதிவிலக்கு விளக்கி உயிர்களை உத்தம நிலையில் உய்த்தலால் அற நூல்கள் உயிர்க்கு உறுதியான உயர்நூல்களாக மதிக்கப்பட்டுள்ளன.

பெறுதற்கு அரிய சிறந்த மக்கட் பிறவியை அடைந்தும் இப்பேற்றின் அருமையை மறந்து வெம்மை நெறிகளில் உழந்து புன்மை புரிந்து தவிக்கும் மனுக்குலத்திற்கு இனித்த முறையில் செய்யும் திறங்களை விளக்கி உய்யும் வகைகளை யுணர்த்திக் கால நிலைகளுக்கு ஏற்ப நூல்கள் பல தோன்றி வருகின்றன.

அற நூல்களும் நீதி நூல்களும் பண்டு தொட்டே நமது தமிழ் மொழியில் மிகவும் பெருகி வந்துள்ளன. ஆயினும், இந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/4&oldid=1438887" இலிருந்து மீள்விக்கப்பட்டது