பக்கம்:தரும தீபிகை 1.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முகவுரை


நூல் இனியவளஞ் சுரந்து புதிய மணங் கமழ்ந்து அரிய நலங்கள் பல மலிந்து புத்தொளி மிகுந்து தத்துவ நோக்குடன் தலை சிறந்துள்ளது. இவ்வுண்மையை எவரும் இதனுள் உய்த்துணர்ந்து கொள்ளலாம். உணர்வின் அளவு உண்மை தெளிவாகி வருகிறது.

இந்த நூல் விளைந்து வந்த நிலையை எண்ணுந்தோறும் என் உள்ளம் இன்பமீதூர்கின்றது. திருக்குறட் குமரேச வெண்பா என்னும் அரிய பெரிய நூலை நான் எழுதி முடித்தபின் என் கருத்துள் தோன்றிய எண்ணங்களை ஒரு புண்ணிய நூலாகப் புனைந்து வந்தேன். மேற்குறித்த பெரு நூலை வெளியிடுங்கால் இதிலிருந்து சில பாடல்கள் அதனிடையே வெளிவர நேர்ந்தன. அவற்றைக் கண்ட அறிஞர் பலர்ஆர்வமுடன் உவந்து பாராட்டி நூல் முழுவதும் வேண்டும் என விழைந்து எழுதினர். ஏறக்குறையப் பத்தாண்டுகளாக இடையிடையே அந்த எழுத்துக்கள் அழுத்தமாய் வந்து கொண்டிருக்கின்றன. அந்த அன்பர்களுடைய உரிமையான வேண்டுகோள்களே இது பொழுது இந் நூல் உரையுடன் வெளி வருதற்குத் தூண்டு கோல்களாயின.

அற நலங்களை யுணர்த்தி அறிவொளி பரப்பி அறியாமையாகிய அக இருளை நீக்கி யாண்டும் உயர்வருளும் இயல்பினது ஆதலால் இது தரும தீபிகை என வந்தது. மனிதனிலை உடல்நிலை மனநலம் இனநலம் சீர்மை சீலம் முதலிய நூறு அதிகாரங்களை யுடையது. அதிகாரம் தோறும் பத்துப் பாக்கள் அமைந்தது.

இந்நூல் முழுவதும் நேரிசை வெண்பாவால் நிறைந்துள்ளது. கவிகளெல்லாம் நெளிவும் தெளிவும் உடையனவாயினும் கருத்துக்களின் அருமை பெருமைகளை அழகுற உணர்த்தி உள்ளுறை நயங்களைத் தெள்ளிதின் விளக்கிக் கலைநலங்கள் கனிந்துள்ளமையால் இவ்வுரை எல்லார்க்கும் இதமாய் இனிமை பயந்து வருமென்று நம்புகின்றேன்.

இந் நூலும் உரையும் ஞாலம் இன்புற நலம் பல தந்து என்றும் நின்று நிலவும்படி எம்பெருமான் திருவடி மலர்களைச் சிந்தித்து நிற்கின்றேன்.


திருவள்ளுவர் நிலையம்

இங்ஙனம்,

மதுரை.

செகவீரபாண்டியன்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/5&oldid=1438891" இலிருந்து மீள்விக்கப்பட்டது