பக்கம்:தரும தீபிகை 1.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



தரும தீபிகை



கடவுள் வாழ்த்து.


அன்பர் உளமேவி ஆருயிர்செய் நல்வினையோர்ந்
தின்பம் உதவி யிடர்களைந்து-தன்பதம்பின்
காணவருள் யானையைமுன் காட்டிவந்த பெம்மானைப்
பேணவரும் இன்பம் பெரிது. (1)

இதன் பொருள்

அன்பர்களுடைய உள்ளங்களில் அமர்ந்து, உயிர்கள் செய்கின்ற நல்வினைகளை அறிந்து, அவற்றிற்கு இயைய இன்பங்களை உதவி, இடர்களை நீக்கி, முடிவில் பரமபதமும் அருளுகின்ற யானைமுகனை முன்னவனாக்கி முதன்மை கொண்டுள்ள முருகப் பெருமானைப் பேணுவார் பேரின்பம் காணுவார் என்பதாம்.

மேவி ஓர்ந்து உதவி களைந்து அருள் என்னும் ஐந்து வினைகளையும் யானைக்கும் பெம்மானுக்கும் தனித்தனியே கூட்டி நோக்குக. தன்பால் அன்பால் உருகினவர்க்கு அருள் புரிந்து இன்பம் உதவியும் அல்லாதார்க்கு அவரவர் வினையளவறிந்து பயன் நல்கியும் வரும் பரமர் என்க.

பெம்மான் என்பது பெருமான் என்றதன் செல்லப் பேர். இறைமையாளராய்த் தலைமை பெற்றுள்ள பெருமையுடையார் எவர்க்கும் முருகன் உரிமைச் செல்வமாயிருக்கும் அருமை கருதி வந்தது. பெரு மகிமைகளையுடையான் பெருமான் என நின்றான்.

பேண இன்பம் பெரிது வரும் என்றது பேண எண்ணியவுடனேயே பேரின்பம் காணியாய்க் கண்முன் கைவரும் என்றபடி. இன்பத்தை இவர் விழையாமலே அது தானாகவே இவரை விழைந்து வரும் என்க.

இளையபெருமாளை ஏத்த மூத்த பிள்ளையார் முன்வந்தருளினார். இன்ப மூர்த்தியாகிய முருகக் கடவுளை அன்பு கூர்ந்து வழிபடுகின்றவர் இம்மை மறுமை எனனும் இருமையிலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/8&oldid=1439411" இலிருந்து மீள்விக்கப்பட்டது