பக்கம்:தரும தீபிகை 1.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

தரும தீபிகை


விழுமியரா யுயர்ந்து இன்பமீதூர்ந்திருப்பர் என்பது கருத்து. உண்மை தெரிந்து உரிமையுடன் உய்க என்பது குறிப்பு.


வணக்கம்

வானும் கடலும் மலையும் நிலமுதலா
ஊனும் உயிரும் உளவெல்லாம்-பானுமதி
கண்ணாக நின்ற கருணைப் பரமனென
எண்ணுக இன்பம் எழும். (2)

இ-ள்

சூரியனையும் சந்திரனையும் கண்களாகக் கொண்டுள்ள பரம்பொருள் வான் ஆதி எல்லாப் பொருள்களுமாய் எங்கும் பரவியுள்ளது; அந்த உண்மையை உணர்ந்து வழிபடின் உலவா இன்பம் உடையனவாய் உயிர்கள் உயர்ந்து விளங்கும் என்க.

உண்மையாக ஒர்ந்து உணர்ந்து ஒழுகவுரிய விழுமியநிலையை விழி தெரிய இது விளக்கியருளியது.

பானு= சூரியன். மதி= சந்திரன்.

இந்த இரண்டு ஒளிகளும் பரமனுக்கு இரு விழிகள் என உருவகம் செய்தது அகண்ட பரிபூரணனாய் அகிலமும் நிலவி நிற்கும் அவனது அற்புத நிலைமையை உய்த்து உணர.

ஆருயிர்கள் உய்யும்படி யாண்டும் பேரருள் செய்யும் பெருமான் ஆதலால் கருணைப் பரமன் என நின்றான்.

பரமன் விண்ணாதி பூதமாய் விளங்கியுள்ளான் என்னும் மெய்யுணர்வு தோன்றியவுடனே உயிரில் ஆனந்த வூற்று ஓங்கி உயரும் என்பது, “எண் ஆக இன்பம் எழும்” என்றதனால் அறிய வந்தது. எண் என்றது இங்கே தத்துவக் காட்சியை.

தோன்றிய தோற்றங்கள் யாவினும் தோன்றாத் துணையான ஒரு தனிமுதல் இனிதமைந்துள்ளது; அதன் மகிமை அளவிடலரியது; அதனை உறுதியாக நம்பி எவ்வுயிர்க்கும் இனியனாய் ஒருவன் உரிமையுடன் ஒழுகிவரின் அவ்வொழுக்கம் கடவுளின் புனித வழிபாடாய்ப் புண்ணியம் பெருக்கிக் கண்ணியம் விளைத்து எண்ணரிய இன்ப நலன்களை இனிது பயந்து இறுதியில் அரிய உயர் கதியில் அவனைத் தனியே உய்த்தருளும் என்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/9&oldid=1439448" இலிருந்து மீள்விக்கப்பட்டது