பக்கம்:தரும தீபிகை 4.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



                1280 தரும தீபிகை
  திவ்விய நிலையில் உயர்த்தி எவ்வழியும் மகிமைப் படுத்துகிற 

இத்தகைய அறிவு சிறிதும் இல்லான் எனினும் பொருள் உடையவன் பெருமை அடைந்து நிற்கிறான்.

  கையில் இருக்கும் பொருளைத் துார ஒதுக்கி வைத்து விட்டு ஆளைத் தனியே நிறுத்துப் பார்த்தால் கடுகு அளவு நீர்மையும் இல்லாதவனும் செல்வத்தால் சீர்மை மிகுந்து நிற்கிறான்.
  பெரிய அறிவாளிகளும் அரிய ஆண்மையாளர்களும் வறிய நிலையை மருவிய பொழுது சிறுமையுறுகின்றனர். எல்லா வகையிலும் புல்லியராயினும் செல்வர்கள் சிறந்து விளங்குகின்றனர்.
  குண நலங்களில் இழிந்தவர் என்று தெரிந்திருந்தாலும் பணமுடைமையால் அவரை எவரும் புகழ்ந்து போற்றுகின்றனர். யாரும் அவரிடம் விழைந்து செல்லுகின்றனர்.
 "அறிவிலாப் பித்தர் உன்றன் அடிதொழாக் கெட்ட வஞ்சர்
     அசடர் பேய்க் கத்தர் நன்றி அறியாத  
  அவலர்மேற் சொற்கள் கொண்டு கவிகளாக்கிப் புகழ்ந்து
     அவரை வாழ்த்தித் திரிந்து பொருள்தேடி." (திருப்புகழ்) 
   மகா மேதையான அருணகிரிநாதர் பொருளை நாடிப் போய் அலைந்திருக்கும் உருப்படிகளை இதில் உணர்த்தியிருக்கிறார்.

எவ்வளவு இழிந்த நிலையினராயினும் பொருளிருந்தால் அவர் உயர்ந்தவராய் உலாவுகின்றார். பணம் எவ்வழியும் யாரையும் மணம் பெறச் செய்கிறது.

   பணம் பந்தியிலே; குலம் குப்பையிலே என்பது பழமொழி. 
   ஒரு செல்வன் வீட்டுக் கலியாணத்தில் விளைந்து வந்த முதுமொழி இது. ஒத்த குலத்தில் பிறந்தவன் ஆயினும் பணம் இல்லையாயின் அவனை ஒதுக்கி விடுகின்றனர்; பணம் இருந்தால் அவன் எவனாயினும் உவந்து அழைத்துப் போய் உயர்ந்த விருந்துகள் புரிந்து உபசரித்தலை உலக அனுபவத்தில் அறிந்து வருகிறோம்.
 "பொன்னொடு மணியுண்டானால் புலைஞனும் கிளைஞனாவான்; 
  தன்னெடு கூட்டி யுண்டு சாதியில் மணமும் செய்வார்; 
  மன்னராய் இருந்த பேர்கள் வகைகெட்டுப் போவாராகில் 
  பின்னவர் யாரோ என்று பேசுவார் ஏசுவாரே."
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/125&oldid=1347951" இலிருந்து மீள்விக்கப்பட்டது