பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/68

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

67

வும் அமையலாம். ஆனால் சிரிப்பது அவர்களுக்கு நிலாச்சோறு உண்பதுபோல. கொடுத்து வைத்தவர்கள்!

வேறு சிலர் இருக்கிறார்கள். அவர்களின் முகங்களில் சிரிப்பைக் காணவேண்டுமானால், சாம்பிராணி தூபம் காட்டினால்தான் முடியும். ஒருவேளை சிரிப்பிற்கும் இவர்களுக்கும் சிம்ம சொர்ப்பனமோ என்னவோ? மற்றும் சிலர் சிரிப்பதைப் பார்த்துவிட்டால், அப்புறம் நமக்கெல்லாம் இம்மைக்கும் ஏழேழு பிறப்பிற்கும்(!) சிரிக்கவே தோன்றாது. அதற்குப் பதிலாக வாய்விட்டு ‘ஓ’வென்று அழுது தீர்த்துவிடத்தான் நாட்டம் கொடுக்கும். இன்னும் ஒரு செட் உண்டு. புன்னகை புரிந்து முப்புரங்களையும் எரித்த ஈசனைப்போன்று இவர்கள் உதட்டின் நுனியில் விஷத்தை ஒளித்து வைத்தவண்ணம் அபாயச் சிரிப்பைச் சிரித்துவிடுவார்கள்! சில பிரகிருதிகள் அசட்டுப் பிசட்டென்று முகத்தில் எண்ணெய் வழியப் பல்லெல்லாம் தெரியக் காட்டிச் சிரித்து, தங்கள் மேல்மாடி காலி என்பதைப் பிறருக்குத் தம்பட்டமடித்துக் காட்டிவிடத் தவறுவதுமில்லை. பைத்தியத்தின் ‘ட்ரேட்மார்க்’ டார்பிடோச் சிரிப்பு எள்பதை மட்டும் மறந்துவிடக் கூடாது.

‘சிரிக்கத் தெரிந்தவன் பாக்கியசாலி, பிறரைச் சிரிக்கப் பண்ணுபவன் பெரியவன்? தனக்குள் சிரித்துக்கொள்ளுபவன் ஈடுசோடில்லாதவன்’ என்கிறது ஆராய்ச்சிப் புத்தகம்.