பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/88

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

87


இச்செய்தியை அறிந்த பாரத நாட்டுக் கோழிகள் எல்லாம் ஓர் அடி கூடுதலாக உயர்ந்து மகிழ்ந்தனவாம்; கோழிகளின் அன்புக்குப் பாத்திரமான சேவல்கள் சிவப்புக் கொண்டைகளை ஓர் அடி உயர்த்தி "கொக்கரக்கோ" கீதம் பாடினவாம்!

நடைமுறை வாழ்விற்கும் இந்தக் கோழிகளின் இனத்துக்கும் நெருங்கிய சம்பந்தம் இருந்து கொண்டுதான் வருகிறது. இந்தத் தொடர்பு இன்று நேற்று வந்ததல்ல; தொன்றுதொட்டு வந்ததாகும். உலகத்தின் ஆரம்ப காலத்திலிருந்தே கோழி முட்டையின் அறிமுகம் உண்டாகி விட்டிருந்ததாகச் சொல்வார்கள்.

எப்படி என்று தெரியுமா!

யாரோ ஒருவன் உலகத்தின் அமைப்பு எப்படி இருக்குமென்று சந்தேகம் கேட்டானாம்!

உடனே இன்னொருவன் கோழி முட்டை வடிவத்தில் உலகம் இருக்கும் என்றானாம்.

அக்கணமே, அந்த மனிதன் கோழி முட்டையைத் தேடிப் போனானாம்! முட்டையைப் பார்த்துவிட்டால், உலகத்தின் அமைப்பை நிர்ணயம் செய்துகொள்ளக் கூடுமென்று எங்கு தேடியும் முட்டையும் கிடைக்கவில்லையாம்! மனமுடைந்த அம்மனிதன் திரும்பிவந்து கொண்டிருக்கையில், பள்ளிப்பிள்ளை ஒருவன் அழுதுகொண்டே வந்தானாம்.