பக்கம்:தான்பிரீன்-தொடரும் பயணம்.pdf/124

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ப. ராமஸ்வாமி


அவன் யாரென்பது தான்பிரினுக்குப் புலனாகிவிட்டது. சில தினங்களுக்கு முன்னால் டிராம் வண்டியில் அவன் பக்கத்தில் உட்கார்ந்த இருவரில் அவன் ஒருவன். அவன் தான்பிரீன் எப்பொழுது வருவான் என்று எதிர்பார்த்துக்கொண்டே நின்றான். அந்த இடத்திலேயே அவனை சுட்டுத் தள்ளிவிடலாமா என்று தான்பிரீன் யோசனை செய்தான். ஒரு வேளை அவனுக்கு உதவியாக வேறு ஒற்றர்கள் அங்கு வந்திருக்கலாம் என்பதாலும் பொது மக்கள் அண்மையில் இருந்ததாலும் அவன் துப்பாக்கியை வெளியே எடுக்காமல் ஒன்றும் அறியாதவன் போல் அப்பெண்களுடன் போய்விட்டான்.

அவர்கள் ஐவரும் டிரம் கொண்டராவுக்குச் செல்லும் ஒரு டிராம் வண்டியில் ஏறிக்கொண்டனர். தான்பிரீன் மட்டும் கடைசியாக ஏறினான். பெண்களில் ஒருத்தி அவனைப் பார்த்து 'அதோ, ஒரு நண்பன் தொடர்ந்து வருகிறான்' என்று மெதுவாகக் கூறினாள். தான்பிரீன் திரும்பிப்பார்க்கையில் பழைய சாக்கன்தான் அவனைத் தொடர்ந்து வந்து வண்டியிலேற முயன்று கொண்டிருந்தான். ஆனால் தான்பிரீன் கால்சட்டைப் பையிலிருந்த ரிவால்வரில் கை போட்டுக்கொண்டிருந்த நிலையைக் கண்டு, அவன் மெதுவாகப் பின்வாங்கி நகர ஆரம்பித்தான். நகர்ந்து கூட்டத்தோடு கூட்டமாய் மறைந்து விட்டான். அந்த இடத்திலேயே தான்பிரீன் அவனைச்சுட்டிருந்தான், பின்னால் அவனால் இடையூறு நேர்ந்திராது. ஆனால் பெண்களின் மத்தியிலே நின்று போராடினால் எதிரியின் குண்டுகள் அவர்களையும் காயப்படுத்துமே என்றெண்ணி அவன் அந்த நேரத்தில் ஒற்றனை உயிரோடு விட்டுவிட்டான்.

அப்பொழுது உயிர் தப்பிய அந்தக் கயவனே அன்றிரவு தான்பிரீன் டிரம் கொண்டராவில் தங்கியிருந்த இடத்தில் சிப்பாய்கள் சென்று தாக்குவதற்குக் காரணமானான்.

122