பக்கம்:தான்பிரீன்-தொடரும் பயணம்.pdf/130

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ப. ராமஸ்வாமி


தப்பி விடலாமென்று ஆவலுடன் எண்ணமிட்டான். ஆனால் பிறர் உதவியில்லாமல் அந்தச் சுவரை எப்படித் தாண்டுவது? அவன் கால்களில் பூட்ஸுகளும் இல்லை. வலது கால் பெருவிரலோ குண்டுபட்டு ஒடிந்து வேதனை கொடுத்து வந்தது. இவற்றோடு உடம்பு முழுவதும் குண்டு பட்ட புண்கள் ஆனால், உயிருக்காகப் போராடுகிற ஒரு மனிதனுக்கு எங்கிருந்தோ தைரியமும் வலிமையும் வந்து விடும் எப்படியோ அவன் ஒரே மூச்சில் அச்சுவரிலேறி அப்பால் குதித்துவிட்டான். இது பெரிய விந்தைதான். தான்பிரீன் பிற்காலத்தில் பாட்ரிக் கலாசாலைப் பக்கம் செல்லும்பொழுது எல்லாம் அந்தப் பெரிய கவரைத் தான் தாண்டியது உண்மைதானா என்று ஆச்சரியப்படுவது வழக்கம். கலாசாலைக்குள்ளே சென்றதும், அவனுக்குக் கொஞ்சம் மனஅமைதி ஏற்பட்டது. ஆயினும் அந்த இடமும் கரோலுடைய வீட்டுக்குப் பக்கத்திலேயே இருந்ததால் சிப்பாய்கள் எந்த நேரத்திலும் அங்கு வந்து விடக்கூடும் என்பதை யறிந்து அவன் மெதுவாகச்சந்தடி செய்யாமல் ஊர்ந்து சென்றான்.

அவன் நடந்து செல்லும்பொழுது இடையே டோல்காநதி குறுக்கிட்டது. தங்குவதற்கு அப்பக்கத்தில் வேறு இடமில்லாததால், அவன் ஆற்றைக்கடந்து செல்லவேண்டியிருந்தது. எப்படியும் பட்டாளத்தார் நின்ற இடத்திலிருந்து வெகுதூரம் தள்ளிக்சென்று விடவேண்டியிருந்தது. வீதி மார்க்கமாய்ச் சென்றால், ஆற்றைத் தாண்டப் பாலம் இருக்கும். ஆனால் வீதியில் பட்டாளத்தாரும் இருப்பார்கள் அல்லவா? எவ்வளவு குளிராயிருந்தாலும் நதியில் விழுந்து நீந்தி அக்கரை செல்லவேண்டுமென்று தான்பிரின் துணிந்தான். ஆற்றில் குதித்துவிட்டான். நீந்துகையில் கால்களில் குண்டுகளால் துளைக்கப்பட்டிருந்த துவாரங்களில் ஒரு பக்கமாய்த் தண்ணிர் புகுந்து மறுப்பத்தால் வெளியே சென்றது. அத்தனைக் கொடுந்துன்பத்திலும் அவனுக்குத் தண்ணீருடைய தண்மை அதிகமாய்த் தெரியவில்லை. இத்தகைய சந்தர்ப்பத்தில் நெருப்புச் சுடாது, நீரும் குளிராது, இயற்கை உணர்ச்சியே அற்றுப்போய்விடுமல்லவா மனத்திலே ஒரு பெரும் உணர்ச்சி குடிகொண்டிருக்கும் பொழுது, அற்பமான துன்பங்களும் இன்பங்களும் ஒருவனைப் பாதிக்கமாட்டா. எனவே கைகளையும் கால்களையும் அடித்துக் கொண்டு தான்பிரீன் எப்படியோ அக்கரைசேர்ந்தான்.

ஆற்றின் மறுகரையில் சமீபத்தில் சில வீடுகளிருந்தன. அவையிருந்த இடம் மரங்களடர்ந்த பொட்டனிக் அவினியூ என்று அவன் தெரிந்து கொண்டான். அவன் நின்றது வீடுகளின் பின்புறத்தில். மேற்கொண்டு அவனால் நடக்கமுடி யவில்லை. அவனுடைய உடம்பிலிருந்து இரத்தம் வழிந்த வண்ணமாயிருந்தது. மேற்கொண்டு வெளியே தங்கினால் வெறுங்களைப்பினாலேயே இறந்து விழநேரும். ஆதலால் ஏதாவது ஒரு வீட்டிற்குச்சென்று இளைப்பாற வேண்டு மென்று அவன் விரும்பினான்.

128