பக்கம்:தான்பிரீன்-தொடரும் பயணம்.pdf/15

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அயர்லாந்து விடுதலைப் போராட்டம்:
ஒரு சுருக்கமான வரலாற்று அறிமுகம்

- உதயன்


ஐரிஷ் விடுதலைப் போராட்டம் 750 வருடங்களுக்கு மேலான நீண்ட நெடும் வரலாற்றைக் கொண்டது. துப்பாக்கி என்னும் ஆயுதம் உபயோகத்திற்கு வருமுன்னரே வெட்டுக் கருவி, குத்துக் கருவி என்பவற்றின் துணைகொண்டு ஆங்கிலோ-நார்மன்ஸினரால் அயர்லாந்து கைப்பற்றப்பட்டது. கத்தி, கோடரி கொண்டு நாட்டைக் கைப்பற்றியவர்களால், பின்பு வீறுகொண்டெழுந்த விடுதலைப் போராட்டத்தைத் துப்பாக்கி, பீரங்கி, ஏவுகணை என்பன கொண்டும் கூட நசுக்கிட முடியவில்லை. உலக வல்லரசான அமெரிக்காவின் நவீன ஆயுதங்கள் வியட்நாமில் மண்கவ்வின; ஈரானில் ஷா மன்னர் தரித்திரிந்த அமெரிக்க ஆயுதங்கள் ஈரானிய மக்களின் புரட்சிப் பிரவாகத்தாற் சரிந்து வீழ்ந்தன. ஆயுத பலத்தால் மக்களை ஒடுக்கி நசுக்கிவிட முடியாது; மக்களே வரலாற்றின் நாயகர்கள் என்ற உண்மையை ஆயுத பலம்கொண்ட சாத்தான்களுக்கு மக்கள் பலம் எப்போதும் பாடம் புகட்டிக் கொண்டே இருக்கின்றது. மக்கள் பலத்துடன் போராளிகளின் ஆயுதங்கள் ஒருபடி உயரும்போது சாத்தான்களின் ஆயுதங்கள் ஓராயிரம் படிகள் வீழ்கின்றன. இந்த வகையில் பிசாசுகளின் கையிலுள்ள ஆயுதங்களைச் சரியவைப்பதற்கு எழுந்த ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராட்டங்களுள் ஐரிஷ் விடுதலைப் போராட்டமும் ஒன்றாகும்.

13