பக்கம்:தான்பிரீன்-தொடரும் பயணம்.pdf/52

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ப. ராமஸ்வாமி


டும். உன்னுடைய தலையில் இருந்து கொஞ்சம் ரோமத்தை அவை கொண்டு போய்விட்டால் ஒன்றும் முழுகிப்போய் விடாது“ என்று சாந்தப்படுத்துவது வழக்கம். தான்பிரீன் "இந்த சுண்டெலிகளுக்குப் போலிஸாரிடம் என்ன உறவு? அவர்களைப் போலவே நாம் போன இடமெல்லாம் வந்து தொந்தரவு செய்கின்றனவே!“ என்று கூறிப் பரிகசிப்பான்.

சிறிது காலத்திற்குப் பிறகு கியோக் வேறு வேலை காரணமாக வெளியேறிவிட்டான். தான்பிரீனுக்கு உதவியாக ஸீன் ஹோகன் என்னும் நண்பன் வந்து சேர்ந்தான். அதிலிருந்து ஐந்து வருடகாலம் அவர்கள் இனைபிரியாமல் இருந்தார்கள். ஹோகன், டிரீஸி, தான்பிரீன் மூவரும் மூன்று உடலும் ஒருயிரும் போல் ஐக்கியமாக வாழ்ந்து வந்தார்கள். அவர்களுக்குள் ஒரு கோபமான வார்த்தையோ, மனஸ்தாபமோ ஏற்பட்டதில்லை. அவர்கள் ஓ கானல் வீட்டில் இருக்கும் பொழுது ஸீமாஸ் ராபின்ஸன் என்னும் உயரிய நண்பன் அவர்களோடு சேர்ந்து கொண்டான். இந்நால்வரும் வயது, நோக்கம், குணம் முதலியவற்றில் ஒத்திருந்தார்கள். அயர்லாந்தைச் சுதந்திர நாடாக்கவேண்டும் என்று அவர்கள் கண்ட கனவுகளுக்கும் தயாரித்த திட்டங்களுக்கும் அளவேயில்லை. இதன் பிறகு ஓ கானல் தமது வீட்டைத் திருப்பித்தர வேண்டுமென்று அவர்களுக்கு அறிவித்தார். அவர்கள் காலி செய்வதைத்தவிர வேறு வழியில்லை. சட்டபூர்வமான உரிமைகளைப்பற்றி அவர்கள் அப்பொழுது வாதாடிக்கொண்டிருக்க வில்லை. வாடகை கொடுத்தாகிலும் வேறு வீடுகளை அமர்த்தலாமென்றால் கண்ட வீடுகளில் வசிப்பது அபாயகரமாயிருந்தது. ஏனென்றால் போலிஸார் ஆங்கில ஆட்சியில் வெறுப்புக்கொண்ட ஐரிஷ்காரர்களைப் பிடிக்கவேண்டும் என்று தேடித்திரிந்து கொண்டிருந்தனர். அந்தச்சமயத்தில் தான்பிரீன் கூட்டத்தாருக்கு ஒரு நல்ல அதிர்ஷ்டம் பிறந்தது. ஸீன் ஹோகனுடைய உறவினர்களில் சிலர் தங்களுடைய பால் பண்ணை ஒன்றை அவர்களுடைய உபயோகத்திற்காகக் கொடுத்தனர். அங்கே படுக்கை முதலிய வசதிகள் இருந்தன. தான்பிரீனுக்கு இதெல்லாம் பழக்கமாகிவிட்டது. முன்னால் தொண்டர் படையைச் சேர்ந்தபொழுது அவன் பலநாள் உண்ண உணவின்றிப் படுக்க இடமின்றிக் கஷ்டப்பட்டுப் பழக்கமடைந்திருந்தான்.

பால் பண்னை நாளடைவில் போலிஸாருடைய கவனத்திற்குட்பட்டது. அவர்கள் 'தகர வீடு' என்று அதை அடையாளம் சொல்லி அழைப்பது வழக்கம்.

ஒரு சமயம் ஸீன் டிரீஸியும் தான்பீரினும் டப்ளின் நகரிலிருந்து சில ஆயுதங்களைக் கொண்டுவருவதற்காக சைக்கிளில் சென்றனர். அவர்கள் கையில் பணமிருந்திருந்தால் ரயிலில் சென்றிருப்பார்கள். அத்துடன் குறிப்பிட்ட நேரத்திற்கு அங்கே செல்ல வேண்டியிருந்தது. காலை எட்டுமணிக்குப் புறப்பட்டு, அன்று

50