பக்கம்:தான்பிரீன்-தொடரும் பயணம்.pdf/75

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தான்பிரீன் : தொடரும் பயணம்


எத்தனை துன்பங்கள் நேர்ந்தாலும், அந்த வீரத் தாய் தைரியத்தை மட்டும் கைவிடவில்லை. வீரப் பிள்ளையை பெற்றதே பாக்கியம் என்று அவள் கருதி வந்தாள். பீலர்களும் பட்டாளத்தார்களும் அடிக்கடி அவளிடம் சென்று, 'உன் மகன் எங்கே?' என்று கேட்பார்கள். அவள் 'என் மகனுள்ள இடத்தில் நீங்கள் கூசாமல் செல்வீர்களா?' என்று கேட்பது வழக்கம். ஒரு சமயம் பட்டாளத்தார் வந்து தான்பிரீனைத் தேடுப்பொழுது, அவன் வீட்டு மாடியிலே இருக்கிறான், போய்ப் பார்த்துக்கொள்ளுங்கள்; என்று அவள் விளையாட்டாகச் சொன்னாள். பட்டாளத்தார் அதை உண்மை என்று எண்ணி, உடனே துப்பாக்கிகளைத் தூக்கிக்கொண்டு, திரும்பி ஓடிப் பக்கத்தில் மறைந்து கொண்டார்கள் பின்னால், தான்பிரீன் வீட்டிலில்லை என்று தெரிந்துகொண்டுதான் அவர்கள் வெளியே வந்தார்களாம்.

தான்பிரீன், வீரத் தாயின் வீர மகன். தாயைப் போல்தானே பிள்ளையும் இருப்பான்!