பக்கம்:தான்பிரீன்-தொடரும் பயணம்.pdf/96

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

13
வைசிராயைக் குறிபார்த்தல்



நாக்லாங் சம்பவத்திலிருந்து அயர்லாந்தில் புரட்சிக்காரர்களுடைய போராட்டம் தீவிரமாகி விட்டது. எங்கு பார்த்தாலும் தொண்டர்கள் ஆயுதங்களைக்காகக் கொள்ளையிட்டனர். ஊர்காவலுக்காகச் செல்லும் போலிசார் ஆங்காங்கேதாக்கப்பட்டனர். டப்ளின் நகரிலிருந்த இரகசியப் போலிசார் திருடர்களையும், சூதாடிகளையும், சாதாரண கலகக்காரர்களையும் கண்டுபிடிப்பதை விட்டு, அரசியில்வாதிகளையும் புரட்சிக்காரர்களையும் பின் தொடர்ந்து சென்றனர். அவர்கள் தங்களுடைய துப்பறியும் வேலைகளுக்காகப் பழைய திருடர்களையும், குற்றவாளிகளையும் கையாட்களாகச் சேர்த்துக் கொண்டனர். நள்ளிரவில் ஸின்பினர்களுடைய வீடுகளில் சோதனை போடவும், லின்பின் புத்தகங்களையும், துண்டுப் பிரசுரங்களையும் கொள்ளையிடவும் அவர்கள் பட்டாளததார் கூடச் சென்று உதவி புரிந்து வந்தார்கள். டப்ளின் நகரிலுள்ள மக்கள் அனைவருக்கும் அவர்களைத் தெரிந்திருந்த போதிலும், அவர்கள் அச்சமின்றி நடமாட முடிந்தது. ஒரு குற்றமும் செய்யாதவர்களும், வாழ்நாள் முழுவதும் துப்பாக்கியையே தொட்டறியாதவர்களுமான மக்களுடைய வீடுகளில் நாள் தவறாமல் சோதனைகள் போடப்பட்டன. இந்த அற்பக் கொடுமைகள் மக்களை அரசாங்கத்திற்கு விரோதமாய்த் தூண்டிவிட்டன. ஐரீஷ்மொழியில் பாடல்கள் எழுதி வைத்திருப்பது போன்ற அற்பக்காரியங்களுக்காகப் பல ஆடவர்களும், பெண்களும், பையன்களும், சிறுமிகளும்கூடச் சிறையில் அடைக்கப்பட்டார்கள். தொண்டர்களால் இக்கொடுமைகளைச் சகித்திருக்க முடியவில்லை.

94