பக்கம்:தான்பிரீன்-தொடரும் பயணம்.pdf/99

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தான்பிரீன் : தொடரும் பயணம்


ளுக்கு மிகவும் காலதாமதமாய்ச் செல்வார்; அல்லது முன்னதாகவே சென்று விடுவார். அலலது போகாமலே நின்று விடுவார்.

வைசிராயைத் தாக்குவதற்காகச் செய்யப்பட்ட முதலாவது முயற்சியில் மைக்கேல் காவின்ஸும் தான்பிரீனும் இருந்தனர். அவ்வாறே கார்க் நகரத் தொண்டர் கடையின் தளகர்த்தாவான பாம் மக்கர் பெயின் என்பவரும் பன்முறை கூட இருந்து உதவி புரிந்தார். (அவர் அடுத்த வருஷம் கார்க் நகர சபைத் தலைவராக இருந்த பொழுது, போலிஸார் அவரை அவர் வீட்டில் வைத்தே கொலை செய்தார்கள்). நவம்பர் மாதம் 11-ம் தேதி யுத்த சமாதான தினத்தில் வைசிராய் கலந்து கொள்வதற்காக டிரினிட்டி கலாசாலையில் ஒரு பெரிய விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தான்பிரீன் தனது தோழர்களுடன் கிரேட்டன் பாலத்தருகில் சென்று காத்துக் கொண்டிருந்தான். அந்தப்பாலம் வைசிராய் கலாசாலைக்குச் செல்லக்கூடிய பாதையில்தான் இருந்தது. தான்பிரீன் ஏராளமான வெடிகுண்டுகளைத் தோழர்களிடம் கொடுத்து வைத்திருந்தான். வைசிராயுடைய கார்வரவும் குண்டுகளை அதன்மேல் எறிந்து காரையே தவிடு பொடியாக்கி விடவேண்டும் என்று அவன் ஏற்பாடு செய்திருந்தான். ஆனால் வைசிராய் வரவில்லை. அவர்கள் குண்டுகளைக் கையில் பிடித்துக்கொண்டு காத்திருந்ததுதான் மிச்சம்.

அக்காலத்தில் பத்திரிகைகளுக்கும்கூட வைசிராயின் சுற்றுப் பிரயானத்தைப் பற்றி உண்மையான விவரங்கள் கிடைப்பதில்லை. அதிகாரிகள் பொய்ச் செய்திகளையே பத்திரிகைகளுக்கு அறிவித்து வந்தனர். வைசிராயின் கடற்கரையிலிருக்கும் பொழுது, நாட்டுப்புறத்திவிருப்பதாகப் பத்திரிகைகளில் செய்தி வரும் இதை நம்பாமல் தங்களுடைய இரகசிய இலாகாவின் உதவியால் உண்மையான தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக்கொண்டிருந்தனர். 1919 டிசம்பர் மாதத்தில் வைசிராய் வடகடலில் ஓடம் விட்டு உல்லாசமாக வாழ்ந்து வருவதாகப் பத்திரிகைகளில் செய்தி வந்தது. ஆனால் உண்மையில் அவர் ரோஸ்கம்மான் என்னுமிடத்தில் தமது நாட்டுப்புற மாளிகையில் வசித்துக்கொண்டிருந்தார். அங்கிருந்து அவர் டப்ளினிலுள்ள தமது வைசிராய் மாளிகைக்குத் திரும்பும் பொழுது பீனிக்ஸ் தோட்டத்திலேயே அவரைத் தாக்க வேண்டுமென்று முடிவு செய்யபட்டது. பீனிக்ஸ் தோட்டதிற்கு அருகே ஆஷ்டவுன் ரயில் நிலையத்தின் பக்கத்திலே அவருடைய காரை மறிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

97