பக்கம்:தாய்மை.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. மனோன்மணியத்தில்

பாத்திரப்படைப்பு

சமுதாய வாழ்வைப் படம் பிடித்துக் காட்டுவனவே நாடகங்கள். ஆயினும் உலகில் வழக்கமான வாழ்வியலை அப்படியே அதே நிலையில் காட்டுவதென்பது இயலாது; கூடாததுமாகும். தொல்காப்பியர் அதனாலேயே நாடக வழக்கினை உலகியல் வழக்கினின்றும் வேறு படுத்திக் காட்டுகிறார். மக்கள் வாழ வேண்டிய வகையினையோ - வாழ்வின் கூறுபாடுகளையோ கொண்டு சீர்திருத்த நெறி பற்றியோ அன்றி வேறு சமுதாய நெறி முறைகள் பற்றி யோ நாடகம் நமக்குப் பல உண்மைகளை உணர்த்தல் வேண்டும். கற்றாரும் கல்லாரும் காட்சியின் வகையிலே வாழ்வின் நடிப்பினைக் கண்டு கற்பன கற்கும் வாய்ப்பினை அளிப்பதே நாடகம். சிலர் இதனை வெறும் பொழுது போக்கு என நினைப்பினும், உண்மையில் இது சமுதாயத் துக்கு நல்ல பயன் தருவதாகும். சமுதாயத்தின் நல்லாசிரி யனாய் விளங்குவதே நாடகம். உள்ளத்தைத் தொடுவ தாலேயே (நாடு + அகம்) இது இப்பெயர் பெற்ற தென் பாரும் உளர். எப்படியாயினும் உலகியல் வாழ்வினைச் சில குறிப்புக்களோடும் பிறதேவையான இணைப்புக்களோடும் சிறிது கற்பனையும் கலந்து வாழ்வியல் பாத்திரங்களைக் கொண்டு நடிக்கச் செய்வதே நாடகமாகும்.

நாடகம் நடிப்பதற்கென அமைந்த ஒன்றேயாயினும் சில நாடகங்கள் படிப்பதற்கென மட்டும் அமைகின்றன. எல்லா மொழியிலும் இத்தகைய வேறு பாட்டினைக் காண இயலும். படிப்பதற்கமைந்தவற்றையும் சிறிது மாற்றத் துடன் நடிப்பதற்கும் பயன் படுத்துவர். எப்படியாயினும் வாழ்க்கையின் படப்பிடிப்பே நாடகமாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/216&oldid=684766" இலிருந்து மீள்விக்கப்பட்டது