பக்கம்:தாய்மொழி காப்போம்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

போராட்டவுணர்வு வேண்டும்

செருமன் நாட்டுக் கிறித்துவ அடிகளார் 'சீன்சிலோபாக்' என்பவர், ஆசிய நாடுகளிற் சுற்றுப் பயணம் செய்துவிட்டுத் திரும்பும் வழியில் இங்கிலாந்துக்குச் சென்றார். அங்கே அவர்க்கு வரவேற்பளித்த 'கான்டர்பரியார்' என்னும் அடிகளார், “இவ்வளவு சிறப்பு வாய்ந்த பேரறிஞரான அடிகளாரை ஓர் உயர்ந்த மொழியிலே நான் வரவேற்க விரும்புகிறேன். அப்படி வரவேற் பதற்கேற்ற உயர்ந்த மொழியான இலத்தீன் மொழியில் வரவேற் பிதழைப் படித்துத் தருகிறேன்" என்று கூறி வரவேற்பிதழைப் படித்துக் கொடுத்தார்.

வரவேற்பை ஏற்றுக் கொண்ட அடிகளார், 'உள்ளன் போடு என்னை வரவேற்க வேண்டும் என்பதற்காக ஓர் உயர்ந்த மொழியில் வரவேற்பளித்தீர்கள். நானும் என் உள்ளன்பைக் காட்ட ஓர் உயர்ந்த மொழியிற்றான் நன்றி கூற வேண்டும், அப்படிப்பட்ட உயர்ந்த மொழியாகிய தமிழ் மொழியிலேதான் எனது நன்றியைச் சொல்ல வேண்டும்' என்று கூறித் தமிழால் நன்றி கூறினார்.

இத்தாலி நாட்டறிஞர் 'போப்பையர்' தமிழின் பாற் கொண்ட பற்றினால் தம்மைத் தமிழ் மாணவன் என்று தமது கல்லறையிற் குறிப்பிடுமாறு சொன்னார். மதத்தைப் பரப்ப வந்த 'கால்டுவெல்' அடிகளாரின் மனத்தைக் கவர்ந்து கொண்டது தமிழ். இத்தாலி நாட்டுப் பேரறிஞர் 'பேசுகி'யை வீரமா முனிவராக்கி வென்றாண்டது தமிழ். சோவியத்து நாட்டுத் தோழர் 'ரூதின்' செம்பியன் ஆனார். செந்தமிழ்ப் பற்றால் 'இலக்கியச் செல்வப் பெருக்குடைய தமிழர்களாகிய நீங்கள் ஏன் இன்று வறியர் போலக் கிடக்கிறீர்கள்?” என 'ஈரான்' அடிகளார் ஏத்திப் புகழ்ந்தார்.

இவ்வாறு பிறநாட்டு நல்லறிஞரையெல்லாம் வாயாரப் புகழ வைத்த பெருமை வாய்ந்த தமிழ் மொழிக்கு முற்றுரிமை படைத்த இத்தமிழ் நாட்டிலேதான் "தமிழா இனவுணர்வு கொள், தமிழா மொழியுணர்வு கொள்", என்ற முழக்கம் நாற்புறமும் பறைசாற்றப்படுகிறது.