பக்கம்:தாய்மொழி காப்போம்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவியரச முடியரசன்

xi



'தமிழே வேண்டும்; எங்குந் தமிழ், எதிலுந்தமிழ், எல்லாந் தமிழ்' என்ற உரிமை வேட்கை ஒருபால் ஒலிக்கிறது. அதே நேரத்தில் 'யாதும் ஊரே யாவருங் கேளிர் என உலகப் பொதுமையும் மாந்தப் பொதுமையும் பேசிய தமிழ்மகன், இனமென்றும் மொழி யென்றும் பிரித்துப் பேசுவது குறுகிய மனப்பான்மையன்றோ? வெறுப் புணர்வை வெளிப்படுத்துவதன்றோ?' என்ற ‘ஞானோபதேச’மும் பரப்பப்படுகிறது.

மொழிப்பற்றும் இனப்பற்றும் குறுகிய நோக்க மென்றோ பிறர்மேற் காட்டும் வெறுப்புணர்ச்சி யென்றோ விளம்புவது, தன்னலத்தை உள்ளடக்கிய தகவிலாக் கூற்றாகும். மற்றவர் விழித்துக் கொள்வரேல் தமது நலத்துக்குக் கேடு ஏற்பட்டு விடுமோ என்ற அச்சவுணர்வே அவ்வாறு திரிபுரை கூற வைக்கிறது. இனவுணர்வும் மொழியுணர்வும் இல்லா மாந்தன் தமிழகத்தைக் தவிர வேறு எங்கே யிருக்கின்றான்? ஏனைய நாட்டினர் இனவுணர்வும் மொழியுணர்வும் இயல்பிலே உடையராய்ப் பரந்த மனப்பான்மை பேசுவர். தமிழன் ஒருவன்தான் தன்னையும் தாய் மொழியையும் மறந்துவிட்டுப் பரந்த மனப்பான்மை பேசிப் பாழாவான்.

தாய்மொழிப் பற்றுடைமை குறுகிய நோக்கமென்று கூறினால், காந்தியடிகள் தம் தாய் மொழியாகிய குசராத்தி மொழியிற்பற்று வைத்திருந்தது குறுகிய நோக்கமா? இரவீந்திரநாத் தாகூர் தம் அன்னை மொழியில் அன்பு வைத்திருந்தாரே, அது குறுகிய நோக்கமா? “தாய் மொழிப் பற்றுத்தான் தாய்நாட்டுப் பற்றுக்கு அடிப்படை” என்று தமிழ்ப் பெரியார் திரு.வி.க. தெளிந்துரைத்தது குறுகிய நோக்கமா? “மூச்சு இரைக்க அடி வயிற்றிலிருந்து கடுமையான ஒலிகளை எழுப்பிப் பொருள் விளங்காத ஒரு நிலையில் வடமொழியில் உன்னைப் பாடுகிற நிலைமையை எனக்கு ஏற்படுத்தாமல், நல்ல தமிழில் - இன்பத் தமிழில் உன்னைப் பாடுவதற்கு எனக்கு அருள் புரிந்த ஆண்டவனே உன்னை நான் போற்றுகிறேன்; நன்றி செலுத்துகிறேன” என எழுதியுள்ள இராமலிங்க அடிகளார் குறுகிய நோக்கினரா?

சூரியநாராயண சாத்திரியார் தமது பெயரைப் பரிதிமாற் கலைஞன் எனத் தமிழிற் பெயர்த்து வைத்துக் கொண்டாரே அது குறுகிய நோக்கமா? “யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவ தெங்குங்காணோம்” எனப் பாடிய பாரதியுமா குறுகிய நோக்கினர்?

“தமிழன் என்றோ ரினமுண்டு
தனியே அவர்க்கொரு குணமுண்டு
அமிழ்தம் அவனது மொழியாகும்”

என்று நாமக்கல் கவிஞர். வெ. இராமலிங்கனார் கூறவில்லையா?