பக்கம்:தாய்மொழி காப்போம்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xii

தாய்மொழி காப்போம்



தமிழ் மொழியிற் பிறமொழிச் சொற்களைக் கலந்து எழுது வது பற்றியும் பேசுவது பற்றியும் கருத்து வேறுபாடு நம்மவரிடையே தலைதூக்கி நிற்கிறது. கலக்கலாம் என்று வாதிடுவோர், சோவியத்து ஒன்றியத்தை உருவாக்கிய சிற்பி வி.ஐ.இலெனின் சொற்களைக் கண்விழித்துப் பார்க்கட்டும்.

“நாம் உருசிய மொழியைக் கெடுத்துக் கொண்டிருக்கிறோம். தேவையின்றி அயன்மொழிச் சொற்களை எடுத்தாளும் போதும் தவறாகவே ஆண்டு வருகிறோம். உருசிய மொழியில், NEDOCHOTY, NEDOSTATKI, PROBELY என்றும் சொற்கள் இருக்கையில் அயன் மொழிச்சொற்களை நம்முடைய மொழியில் ஏன் எடுத்தாள வேண்டும்?....... தேவையின்றி அயன்மொழிச் சொற்களைப் பயன் படுத்துவதன் மீது ஒரு போரையே தொடுக்கவேண்டிய நேரம் இது வன்றோ?” உலகத் தொழிலாளரை ஒன்றுபடுத்தப் போராடிய இலெனின் சொற்கள்தாம் இவை. இனியேனும் மொழிக்கலப்பாளர் திருந்துவரா?

மொழியின் உரிமைக்கும் இனத்தின் விடுதலைக் கும் உரத்த குரல் எழுப்புவதுதான் இயற்கைக் கூறு. இனமும் மொழியும் அடிமைப்பட்டுக் கிடக்க அதனை மறந்தோ மறைத்தோ உலகப் பொதுமை பேசுவது இயற்கைக்கு முரண்பட்டதாகும். நடுவு நிலைமையுடன் எண்ணிப் பார்க்கும் எவரும் அம் முரண் பாட்டை ஏலார். இனமும் மொழியும் ஏற்றம் பெறுமிடத்தேதான், பொது மையோ புதுமையோ நிலைத்தவையாக உண்மையானவையாக மிளிர இயலும். இன்றேல் பொதுமையும் புதுமையும் வெறுமையாகும். ஆதலின் மொழியுணர்வு கொள்க, மொழித் தொண்டு புரிந்தோரைப் போற்றி இனவுணர்வு கொள்க.

இதனை யுணர்ந்து கொண்ட தமிழ்நாடு இந்த நல்வழியில் முனைந்து நிற்பது வரவேற்கத் தக்கதே. ஏய்ப்பும் எதிர்ப்பும், தடுப்பும் மறுப்பும் ஏற்படுங்கால் அஞ்சலும் துஞ்சலுங் கெடுத்து, மயக்கமும் தயக்கமும் விடுத்து, ஆண்மையும் வாய்மையுங் கொண்டு, அவற்றை எதிர்த்துத் தகர்த்தல் வேண்டும். தன்னிலை மறந்து தமிழ்மகன் மெய்ந்நிலை பெறுதல் வேண்டும். இத்தகு போராட்டவுணர்வு ஒன்றுதான் இன்று தேவை. இத்தேவையை உணர்ந்தே அதற்கேற்ற பாடல்கள் இத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. மேலும் தமிழுக்குத் தொண்டு செய்த பெரியார்கள் பற்றிய பாடல்களும் சேர்க்கப்பட்டுள்ளன, தமிழ் காக்க அவை உறுதுணையாகும் என்பதால். உணர்க! எழுக! வருக! தாய்மொழி காப்போம். காரைக்குடி


காரைக்குடி
1.11.1990 அன்பன்
முடியரசன்