பக்கம்:தாய்மொழி காப்போம்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவியரச முடியரசன்

31



21. போருக்கு வா!

யாருக்கு நீயஞ்சிச் சாகிறாய்? - மொழிப்
போருக்கு வா! எங்குப் போகிறாய்?
பாருக்குள் நீ இன்று மூத்தவன் - தமிழ்
வேருக்கு நீபுனல் வார்த்தவன்.

வீட்டுக்குத் தூணென நின்றனை- களி
யாட்டுக்கு வாழ்வினைத் தந்தனை
நாட்டுக்கு யாரிங்குக் காவலோ? - வட
நாட்டுக்கு நீயென்ன ஏவலோ?

[1]ஓட்டுக்கு வந்தவன் ஆளவோ? - பட
கோட்டிக்கு நாடின்னும் தாழவோ?
ஆற்றுக்குள் காத்தனன் என்பதால்- தமிழ்
நாட்டுக்குங் காவலன் என்பதோ?

கோட்டைக்குள் ளேஒரு கும்பலோ?-ஒரு
[2]கோட்டுக்குள் ளேவிழும் வெம்பலோ?
தேட்டைக்குள் வாழ்வரை நம்பவோ? - இனும்
இகேட்டுக்குள் வீழ்ந்துளம் வெம்பவோ?

நேற்றைக்கு நீயிங்கே ஆண்டவன் - அரி
யேற்றையும் விஞ்சுரம் பூண்டவன்
கூற்றுக்கு நேர்நிற்க அஞ்சிடாய்-தமிழ்
நாற்றுக்கு நீர்விடக் கெஞ்சினாய்

நாளைக்கு நின்னினம் போற்றுமோ? - சிறு
கோழைக்குங் கீழெனத் தூற்றுமே?
காளைக்குச் சோற்றினில் ஏக்கமோ?- மொழி
வாழையைக் காப்பதில் தூக்கமோ?

தோளுக்குள் ளேஉரம் ஏற்றுவாய் - மனச்
சூளைக்குள் ளேஎரி மூட்டுவாய்
வாளுக்குள் ளேசுடர் ஏற்றுவாய்-ஒரு
நாளைக்குள் ளேபகை ஓட்டுவாய்

{{dhr||

(9-3-1987)

  1. ஓட்டுக்கு - ஓடம் ஒட்டுவதற்கு
  2. கோட்டுக்குள் - கிளையில்