பக்கம்:தாய்மொழி காப்போம்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவியரச முடியரசன்

45



30. எக் காலம்

காட்டுகிற 'டீவி' யைக் கண்டன்று நீகளித்தாய்
நாட்டமுடன் 'தூரதர்சன்' நாடியின்று பார்க்கின்றாய்
பூட்டுந் தமிழ்ப்புலியே போற்றும் உனதுமொழி
காட்டுந் தொலைக்காட்சி காண்பதுதான் எக்காலம்?

இசையெழுப்பும் ரேடியோ' ஏற்றன்று கேட்டிருந்தாய்
வசையுடுத்த 'ஆகாச வாணியின்று' கேட்கின்றாய்
நசைவிடுத்த கோட்புலியே நம்நாட்டில் வானொலியைப்
பசியெடுத்துக் கேட்பதற்குப் பாய்வதுதான் எக்காலம்?

ஏறிப் பறந்துவரும் 'ஏரோப்ளேன்' அன்றிவர்ந்தாய்
மாறியது 'வாயுதூத்' மற்றதிலின் றேறுகின்றாய்
[1]தூறல் வரிப்புலியே தூக்கம் விடுத்தெழுந்து
வீறுடன்நீ வானூர்தி மேலூர்தல் எக்காலம்?

காணுங்கால் 'குட்மார்னிங்' என்றன்று கையெடுத்தாய்
நாணமிலா தின்று 'நமஸ்தே' மொழிகின்றாய்
[2]ஏணம் விடுபுலியே ஈன்றெடுத்த தாய்மொழியிற்
காணும் வணக்கமெனக் கைகுவிப்ப தெக்காலம்?

 

(8.3.1987)


  1. (தூறல் - பழிச்சொல்)
  2. (ஏணம் - வலிமை)