பக்கம்:தாய்மொழி காப்போம்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவியரச முடியரசன்

53



'கடவுளர்கள் உகந்தமொழி, என்புக் கூட்டைக்
காரிகையாக் கண்டமொழி, மறைக்காட் டூரில்
அடைகதவந் திறந்த மொழி, முதலை யுண்ட
ஆண்மகவை மீட்டமொழி, தெய்வப் பான்மை
படருமொழி, பத்திமொழி, தொடுக்குந் தெய்வப்
பழம்பாடல் நிறைந்தமொழி, உள்ள மெல்லாம்
மடைதிறந்த வெள்ளமென அருளைப் பாய்ச்சி
மகிழ்விக்கும் அன்புமொழி தமிழே யன்றோ!'

என்றுரைத்த சொன்மாரி செவியு ளோடி
என்மனத்தை நெக்குருக்க இளகி ஆண்டு
நின்றிருக்கும் நான் மகிழ்ந்தேன்; எதிரில் தோன்றும்
நெடுங்கோவி லுட்புகுந்தேன்; அருளால் நெஞ்சம்
ஒன்றிநிற்கும் பன்னிருவர் நால்வர் மற்றோர்
ஓதிவைத்த பாடலெலாம் உன்னி யுன்னிச்
சென்றிருந்தேன்; திடுக்கிட்டேன்; சிந்தை நொந்தேன்;
செந்தமிழைக் காணவிலை திரும்பி விட்டேன்.