பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/10

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

viii

கார்ல் மார்க்ஸ் சமுதாய மாற்றங்கள் மக்கள் பிரிவினர். வர்க்கங்கள் ஒன்றுடன் ஒன்று மோதுவதால் விளைகின்றன. வரலாறு என்பது வர்க்கப் போராட்டங்கள் வரலாறே என்று சொன்னார். வரலாற்றைப் படைப்பவன் மனிதன், உழைப்பே மனிதனைப் படைப்பது என்று ஏங்கெல்ஸ் அறுதியிட்டுச் சொன்னார். இப்புதிய சிந்தனை ஐரோப்பாக் கண்டம் முழுவதும் காட்டுத் தீ போல உழைப்பாளரிடையே பரவிற்று. முதலாளித்துவம் சோஷலிசம் என்னும் வாதங்களும் பிறந்தன.

மார்க்சியம் உழைக்கும் வர்க்கத்தையும் சிந்தனையாளர்களையும் இலக்கிய படைப்பாளிகளையும் ஈர்த்தது. மக்சீம் கார்க்கி இவர்களில் ஒருவர்.

மக்சீம் கார்க்கி 1868 மார்ச் 16 ஆம் நாள் ரஷ்யாவில் நிஜினி நோவோகார்டு என்னும் இடத்தில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் அலக்ஸி என்பதாகும். இவருடைய தந்தையார் ஒரு தச்சர். சிறுவயதிலேயே தந்தையை இழந்தார். தாயும் மறுமணம் செய்துகொண்டார். எனவே அலக்ஸி தம் தாய்ப் பாட்டியால் வளர்க்கப்பட்டார். இதனால் வாழ்நாள் முழுதும் பாட்டியிடம் பாசமும், பரிவும், நன்றியும் காட்டி வந்தார், இவரை வளர்த்து ஆளாக்கிய பெருமை பாட்டிக்கு உரியது. 1879-ல் அவருடைய தாய்! இறந்தார். சிறு பையனாக இருந்தபோதே பல பணிகளைச் செய்ய வேண்டியவரானார். முதலில் காலணிகள் உற்பத்தித் தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்தார். ஓர் ஆண்டுக்குப் பிறகு கட்டட ஒப்பந்தகாரரிடம் வேலை செய்தார். வேலை கடினமாக இருந்ததால் தப்பி ஓடி டோப்ரி என்னும் பயணக்கப்பலில் வேலைக்குச் சேர்ந்தார். கப்பலில் சமையல்காரராக இருந்த மிகைல் அகிமோவிச் என்பவர் அவருக்குப் புத்தகங்கள் படிப்பதற்கு ஆர்வம் ஊட்டினார். கோகோல், ஹேன்றி பீல்டிங் முதலான நாவல் ஆசிரியர்கள் அறிமுகமானார்கள். இதற்குப் பின் டுமாஸ், டெர்ரெல்கெஸ்டாவ், மாண்டிபன், லெர்மான்டொவ், தாஸ்தாவ்ஸ்கி, டால்ஸ்டாய், துர்க்கனேவ், டிக்கன்ஸ்,